குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்!கடந்த ஆண்டு அதிகரிப்பு -முழு புள்ளி விபரம்!
1. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 24 சதவீதம் அதிகரித்துள்ளன.
2. குழந்தை கடத்தல் 43 சதவீதம், சிறுவர் பாலியல் வன்முறை 30 சதவீதம் என்று உயர்ந்துள்ளன.
3. நடப்பாண்டில் மட்டும் 6406 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதையும் சேர்த்து இதுவரை நாடெங்கிலும் மொத்தம் 33,100 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
4. தமிழகத்தில் 16.6 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 13.2 சதவீதமும், டெல்லியில் 12.8 சதவீதமும், பீகாரில் 6.7 சதவீதம், ஆந்திராவில் 6.7 சதவீதம் என குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளன.
5. உத்தர பிரதேசத்தில்தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.
6. உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியில் குழந்தை கடத்தல் அதிகமாக உள்ளது.
7. மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசத்தில் குழந்தை பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.
8. மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் மாநிலங்களில் சிசுக் கொலைகள் அதிகளவில் நடக்கின்றன.
9. பாலியல் தொழிலில் ஈடுபடுத்த பெண் குழந்தைகளை வாங்குவதில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
10. மகாராஷிராவில் பதிவாகும் வழக்குகளில் 74 சதவீத வழக்குகள் பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கிய வழக்குகள் தான்.
11. பாலியல் சம்பவங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் மாநிலமாக மேற்கு வங்கம் முதல் இடத்தில் உள்ளது.
12. இங்கு 298 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன. தங்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில் குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்!
உறையவைக்கும் சில செய்திகள்:
1. டெல்லி காந்திநகரில் 5 வயது சிறுமியை அண்டைவீட்டுகாரர்கள் இருவர் பாலியல் சித்ரவதை செய்துள்ளனர். அவள் பிறப்புறுப்பில் மெழுகுவர்த்தி எண்ணைபுட்டியை விட்டு துன்புறுத்தி உள்ளனர். நாங்கள் குடி போதையில் செய்த தவறு என ஒத்துக்கொண்ட அவர்களைக் காவல்துறையினர் பீகாரில் கைது செய்தனர். இரண்டு நாட்களாக தேடப்பட்ட அந்தச் சிறுமி, அடைத்து வைக்கப்பட்டிருந்த வேறொரு அறையிலிருந்து மீட்கப்பட்டார்.
2. அலிகாரில் ஆறு வயதுச் சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு இறந்து போய் அவள் உடல் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருக்கிறது.
3. தமிழ்நாடு, திருப்பூரில் எட்டு வயதுச் சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள். பக்கத்து வீட்டு 23 வயது இளைஞர் அவளிடம் வந்து சோறு கேட்டு, அவள் சோறு பரிமாறுகையில் அறையைப் பூட்டி விட்டு அவளைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கிறார்.
4. கோவையில் பிப்ரவரி மாதத்தில் காணாமல் போன 13 வயதுச் சிறுமியை பெங்களூருக்குக் கடத்திச் சென்றவன், இரு மாதங்களுக்குப் பின்னர் திரும்ப அழைத்து வந்தபோது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறாள். அவ்விரு மாதங்களாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட அந்தச் சிறுமியும் மருத்துவமனையில் இருக்கிறாள்.
காவல்துறையினரின் அலட்சியப்போக்குகள்
1. டெல்லி காவல் துறை தலைவர் நீரஜ் குமார், "இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கமுடியாது என்பது உண்மை தான்" என்று தெரிவித்துள்ளார்!
2. டெல்லி சிறுமி விசயத்தில் காவல்நிலையம் முன்பு போராட்டம் செய்து கேள்வி கேட்ட பெண்ணைக் காவல் துறை துணை ஆணையர் கன்னத்தில் அறைந்தது, பெண்கள் விசயத்தில் காவல்துறையினரே அத்துமீறுகின்றனர் என்பதன் அடையாளம்!
3. சிறுமி குறித்த வழக்குகளை கடைசி வரை காவல்துறையினர் பதிவு செய்யவே இல்லை... கட்டட தொழிலாளியான சிறுமியின் அப்பாவின் கையில் 2000 ரூபாயைக் கொடுத்து வெளியே சொல்ல வேண்டாம் என காவல்துறையினர் கூறியிருக்கின்றனர்.
உரத்த சிந்தனை
1. குழந்தை நலத்துறை நடத்திய ஆய்வில் பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகளின் எண்ணிக்கையின் சதவிகிதம் 53%. இதில் 47% பெண் குழந்தைகள்!
2. 53% ஆண் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர்.
3. 90% குழந்தைகளும் நெருங்கிய உறவுகளாலேயே பாதிக்கப்படுகின்றனர். 10% வெளி நபர்களால் பாதிக்கப்படுகின்றனர்!
4. இந்தப் பிரச்சினையின் ஆணிவேராக இருக்கும் காரணங்களில் மது முக்கிய இடத்தை வகிப்பது விளங்குகின்றது.
5. கட்டுப்பாடு இல்லாத கலாச்சார சீரழிவுகளும், நிர்வாண காட்சிகள், அசைவுகள் மூலம் ஆபாசத்தை விற்றும் காசாக்கும் ஊடகங்கள் மக்களிடம் மிருகத்தனமான உணர்வுகளை வளர்க்கின்றன.
6. சரிக்குச் சமமான அளவில் காவல் நிலையத்திலும் அதிகமான பாலியல் வன்முறைகள் நடப்பதை மக்கள் அறியவேண்டும்.
7. தங்கள் குழந்தைகளின் மன உணர்வுகளைப் பெற்றோர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
8. பெண் குழந்தைகளிடம் உலகில் நடக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ள எச்சரிக்கை உணர்வை ஊட்ட வேண்டும்.
9. "அச்சம் தவிர்" போன்ற உணர்வுகளை ஊட்டி குழந்தைகளைத் தம்மைத்தாமே காப்பாற்றி கொள்ளவேண்டிய முறைகளைப் போதிப்பதில் பெற்றோர்கள் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இந்திய மக்கள் தொகையில் 30% பேர் குழந்தைகள், அதாவது 40 கோடி குழந்தைகள். அவர்கள் மீதான கவனம் தவிர்க்க முடியாத ஒன்று. நாளைய புதிய தலைமுறைகள் அவர்கள் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் உறைக்கவேண்டும்.
10. சில நேர்மையான ஊடகங்கள், காவல்துறையினரின் அத்துமீறல்கள் குறித்து செய்தி வெளியிட்டால், தற்காலிக பதவி நீக்கம்செய்து கோப்புகளை முடித்து விடுவதில் மட்டுமே காவல்துறை கவனம் செலுத்துகிறது. அரசாங்கமோ அதனை வைத்து அரசியல் செய்யும். நீதி முறைபடுத்துவோம் என்று முழக்கமிட்டு டாஸ்மாக் கடையை திறந்துவைத்து, அடுத்த குழந்தை பாலியல் வன்முறைக்கான மிருகங்களை உருவாக்கும் வேலையையும் அரசே செய்யும்!
பாலியல் அரக்கர்களைக் கண்ட இடத்தில்வைத்து மக்களே கல்லெறிய ஆரம்பித்தாலாவது அரசுகள் திருந்துமா?
- அபூஷேக் முஹம்மத், துபை
Category: மாநில செய்தி
0 comments