கோவை சிங்காநல்லூரில் பிரிட்ஜில் வைத்த புதினா கட்டுக்குள் பாம்பு!
கோவை, பிப். 13:
கோவை சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் தண்டபாணி, அரசு அலுவலர். இவரது மனைவி சந்திரலேகா. கடந்த திங்கள் அன்று சந்திரலேகா அருகில் உள்ள சிங்காநல்லூர் உழவர் சந்தைக்கு சென்று காய் மற்றும் புதினா கட்டு வாங்கி வந்தார். புதினாவை வீட்டில் உள்ள பிரிட்ஜில் வைத்துள்ளார். நேற்று காலை சமைப்பதற்காக பிரிட்ஜில் உள்ள புதினா கட்டை எடுத்து தட்டில் வைத்து பிரித்தார். அப்போது, அதில் ஒரு அடி நீளமுள்ள பாம்பு நெளிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம், பக்கத்தினர் உடனடியாக வடவள்ளியில் உள்ள பாம்பு பிடிக்கும் பொதுநல அமைப்பை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர் பாம்பை பிடித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: இப்பாம்பு காமன் பிரைடல் (அலங்கார பாம்பு) என்ற வகையை சேர்ந்தது. இதன் மொத்த வளர்ச்சியே ஒரு அடி தான் இருக்கும். இப்பாம்புகளுக்கு விஷத்தன்மை கிடையாது. இந்த வகையான பாம்பு 1,500 அடி உயரத்துக்கு மேலே அதிக குளிர்ச்சியான பகுதிகளில் வசிக்கக்கூடியவை என்றார். இந்த வகையான பாம்பு இப்பகுதியில் இருப்பது ஆச்சரியமான ஒன்று. பிரிட்ஜில் உள்ள குளுமையினால் தான் வெளியே வராமல் இருந்துள்ளது என்றார். பின்னர் பாம்பை ஆனைகட்டி வனப்பகுதியில் விட கொண்டு சென்றனர். புதினா கட்டுக்குள் பாம்பு இருந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Category: மாநில செய்தி
0 comments