'ஒரேயொரு மிஸ்டு கால் ஓட்டாண்டியாய் வாழ்க்கை': நைஜீரிய கொள்ளையர்களின் புதுவகை கைவரிசை!
நாளுக்கு நாள் விரிவடைந்து, வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் பலனாக பரந்து விரிந்த இந்த பெரிய உலகம் நமது உள்ளங்கை அளவிற்கு சுருங்கி விட்டது. இதன் பலனாக மின்னணு வர்த்தகம், மின்னணு வங்கியியல் என மனிதர்களின் அனைத்து தேவைகளையும் வீண் அலைச்சலின்றி அமர்ந்த இடத்தில் இருந்தே வெகுசுலபமாக் நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது.
இந்த தொழில்நுட்ப புரட்சி பல கோடி மக்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கி வரும் அதே வேளையில், சில ஊடுருவல் (ஹேக்கிங்) பேர்வழிகளுக்கும் காமதேனுவாக இருந்து வருகிறது.
குறிப்பாக நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சில சமூக விரோதிகள், இந்தியர்களை குறி வைத்து பல ஆண்டுகளாக இணையதள மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். இயந்திரம் மூலம் பணம் எடுக்கும்போது அவர்களின் ஏ.டி.எம். கார்டில் உள்ள விபரங்களை இந்த பலே பேர்வழிகள் திருடி விடுகின்றனர்.
இதற்காக, ஏ.ட்டி.எம். இயந்திரங்களில் பணம் போடும் ஊழியர்களை நட்பாக்கிக் கொள்ளும் இவர்கள், அவர்களின் துணையுடன் இயந்திரத்திற்குள் அட்டையை செலுத்தும் நுழைவாயில்களின் பின்புறத்தில் மிகவும் நுட்பமான ரகசிய 'மைக்ரோ கேமரா'க்களை பொருத்தி, பணம் எடுக்கவரும் வாடிக்கையாளர்களின் அட்டையில் உள்ள 12 இலக்க ரகசிய கணக்கு விபரங்களை அந்த மைக்ரோ கேமரா வழியாக அமர்ந்த இடத்தில் இருந்தே பதிவு செய்து கொள்கின்றனர்.
அதில் உள்ள தகவல்களின்படி, உடனடியாக போலி அட்டைகளை தயாரித்து, வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை மொத்தமாக சுரண்டி, துடைத்து விடுகின்றனர். இது மோசடியில் முதல் ரகம்.
இரண்டாவது ரகமாக, 'ஆன்லைன்' மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் இணைய பயன்பாட்டாளர்களின் ரகசிய தகவல்களை அவர்களது கம்ப்யூட்டர்களுக்குள் ஊடுருவுவதின் மூலம் உளவறிந்து, அந்த கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்) பயன்படுத்தி அவரது பணத்தை சூறையாடுவதோடு மட்டுமின்றி, அவர் கொடுக்கல்- வாங்கல் செய்து வரும் வணிக நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 'ஆர்டர்' செய்து கடனாக வாங்கிக் கொண்டு, அந்த கடன் சுமையை ஏமாந்த வாடிக்கையாளர் தலையில் கட்டி விடுகின்றனர்.
இந்த வகையில் சுரண்டப்படும் பணம் முழுவதும் சில நிமிடங்களுக்குள்ளாகவே 10-15 வெளிநாட்டு வங்கி கணக்குகளுக்கு கைமாறி நைஜீரியா, உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மோசடிப் பேர்வழிகளுக்கு சொந்தமான வங்கி கணக்குகளுக்கு பத்திரமாக போய் சேர்ந்து விடுகிறது.
இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் அவர்களின் உறவினர்களோ, நண்பர்களோ குறிப்பிட்ட அந்த வங்கிக்கு சென்று, மொத்த தொகையையும் துடைத்து எடுத்துவிட்டு, அந்த வங்கிக் கணக்கையும் மூடி விடுகின்றனர். பெரும்பாலும், போலி பெயர் மற்றும் முகவரிச் சான்றுகளை தந்தே சிலர் மோசடி என்ணத்துடன் இத்தகைய வங்கி கணக்குகளை தொடங்குவதால், கணக்கை முடித்துக் கொண்ட பின்னர் அவர்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையே நிலவி வருகிறது.
இதைப்போன்ற சில மோசடிகள் மட்டுமே ஊடக செய்திகளின் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பல மோசடிகள் ஏமார்ந்தவருக்கும், ஏமாற்றியவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு போல், காதும் காதும் வைத்தாற்போல் ரகசியமாக மறைக்கப்பட்டு வருகின்றன.
இப்படி, ஏராளமான இந்தியர்களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை சுரண்டி, ருசி கண்டுவிட்ட இந்த மோசடிப் பேர்வழிகள், மோசடிக் கலையின் மூன்றாவது உத்தியாக தற்போது புதிய கொள்ளை முறையை கையாண்டு வருகின்றனர்.
'ஒரேயொரு மிஸ்டு கால்- ஓட்டாண்டியாய் எதிர்முனை ஆசாமியின் வாழ்க்கை' என்பதுதான் இந்த புதிய கொள்ளை முறை. இதன்படி, 'மொபைல் பேங்கிங்' எனப்படும் செல்போன் மூலம் அதிகமாக பணப்பரிவர்த்தணை செய்துவரும் நபர்களுக்கு இவர்கள் 'மிகச் சிறியதொரு' மிஸ்டு கால் கொடுக்கிறார்கள்.
'ஏதோ முக்கியமான அழைப்புபோல் இருக்கிறது' என்று எதிர்முனையில் இருப்பவர் அழைப்பு வந்த எண்ணை திருப்பி அழைத்தால் போதும். அவரது சிம்கார்டில் இருந்து சுமார் ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிரம் ரூபாய் வரை அழைப்புக்கான கட்டணமாக கரைந்து விடும்.
அதுமட்டுமின்றி, அவரது செல்போனில் உள்ள வங்கி கணக்கின் ரகசிய 'பாஸ்வேர்ட்' உள்ளிட்ட அனைத்து தொடர்புகளும் மூன்றே வினாடிகளுக்குள் மோசடிப் பேர்வழிகளை சென்றடைந்து விடும். அடுத்த சில நிமிடங்களில் அவரது மொபைல் பேங்கிங் கணக்கின் மூலம் அவரது வங்கி இருப்பு சுத்தமாக துடைக்கப்பட்டு, அவர் ஓட்டாண்டியாக தெருவில் நிறுத்தப்படுவார்.
இவற்றில் பெரும்பாலான 'மிஸ்டு கால்' +375602605281, +37127913091 போன்ற எண்களில் இருந்தே வரும். சர்வதேச தொலைபேசி தொடர்பக குறியீடுகளின்படி பார்க்கப்போனால், 375-ல் தொடங்கும் எண் ஆப்கானிஸ்தானில் உள்ள பெலாரஸ் பகுதியையும், 371- என தொடங்கும் எண் வட ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த லட்வியா என்ற சிறிய நாட்டையும் சேர்ந்தது என தெரிய வருகிறது.
இங்கெல்லாம் தங்களது கைக்கூலிகளை நியமித்திருக்கும் நைஜீரியாவின் ஒரு இனத்தை சேர்ந்த மோசடிப் பேர்வழிகள் தற்போது இந்த 'மிஸ்டு கால்' மூலம் தங்களது கைவரிசையை அரங்கேற்றி வருகின்றனர். *இதைப்போன்ற கொள்ளையர்களிடம் பணத்தை பறிகொடுத்தவர்களில் வடசென்னை பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவரும் ஒருவர்.
பிரபல ஆடிட்டரான இவர், எருக்கஞ்சேரி பகுதியில் அலுவலகம் வைத்து தொழில் செய்து வருகிறார். அருகாமையில் உள்ள எருக்கஞ்சேரி ’யூகோ வங்கி’ கிளையில் கணக்கு வைத்துள்ள இவர், தனது வாடிக்கையாளர்களின் சார்பில் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பணப்பரிமாற்றம் செய்யவும், தனது தனிப்பட்ட அரசு சார்ந்த வரியினங்களை செலுத்தவும் மேற்படி வங்கியின் அனுமதி பெற்று ‘இ-பேங்கிங்’ வாயிலாக பணப்பரிமாற்றம் செய்து வந்தார்.
சமீபத்தில், இவரது வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவிய மோசடிப் பேர்வழிகள் அதில் இருந்த ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 34 ரூபாயையும் துடைத்து, வழித்தெடுத்து விட்டனர். இது தொடர்பாக, வங்கியின் கிளை அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் அளித்தபோது, நடந்த சம்பவத்துக்கு வாடிக்கையாளரின் கவனக்குறைவே காரணம் என குற்றம் சாட்டிய வங்கி நிர்வாகம், இவ்விவகாரத்தில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கூறி, கையை விரித்து விட்டது.
நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் சுபாஷ் சந்திரபோஸ் புகார் அளித்துள்ளார். புகாரை பதிவு செய்து கொண்ட போலீசாரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆறுதல் கூறி அனுப்பியுள்ளனர்.
மோசடிக்கான குற்றப்பிரிவு 420-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் தொடர்புடைய உள்நாட்டு குற்றவாளிகளில் யாரேனும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்து, அவர்களுக்கு அம்மாநிலத்தில் ஏகப்பட்ட சொத்து இருக்கும் பட்சத்தில், வேறொரு மாநிலத்தை சேர்ந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்வதில் பல அனுமதிகளுக்காக காத்துக் கிடக்க வேண்டிய நிலையும், பல சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலையும்தான் நடைமுறையில் உள்ளது.
உள்நாட்டிலேயே இப்படி ஒரு நிலை நீடித்துவரும்போது... கண்டம் விட்டு கண்டத்தில் அமர்ந்து கொண்டு, ஒரேயொரு மிஸ்டு காலின் மூலம் நம்மை ஓட்டாண்டியாக மாற்றும் மோசடி கும்பலை பிடித்து, அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்து கொடுப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியப்படாத செயல் என்று சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இதைப்போன்ற 'மிஸ்டு கால்' மோசடிப் பேர்வழிகளிடம் ஏமாந்துப் போகாமல் விழிப்புடன் இருப்பதன் மூலம் நமது பணத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அதன்படி, +375602605281, +37127913091 போன்ற எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால்களை புறக்கணிப்பதுடன், உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிப்பதன் மூலமாகவும் தகவல் தொழில் நுட்ப புரட்சியின் தீய விளைவுகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிக, மிக அவசரமான- அவசியத் தேவையாகும்.
Category: உலக செய்தி
0 comments