பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு!
பெரம்பலூர், ஜன.14-
பெரம்பலூர் மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 28.02.2014க்குள் விண்ணப்பிக்கலாம் .
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள்
அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசின் சிறப்புத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்குரிய விண்ணப்பப்படிவத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து 28.02.2014-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பெரம்பலூரில் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் எழுத படிக்க தெரிந்தவர்கள், பட்டதாரிகள் பயன்பெறலாம்.
நிபந்தனைகள்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 31.12.2012 அதற்கு முன்னதாக பதிவு செய்தவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 31.12.2013 தேதியில் 45 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது.
மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலை தூரக்கல்வி பயிலுபவராக இருக்கலாம். மனுதாரர்கள் தங்களுடைய அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்¢ப்பு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்குரிய அடையாள அட்டை, ஒரு புகைப்படம் மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தங்கள் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகத்துடன் 28.02.2014-க்குள் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்த வாய்ப்பினை மாற்றுத்திறனாளிகள் முறையாக பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Category: மாவட்ட செய்தி
0 comments