பெரம்பலூர் உள்பட 15 மாவட்ட அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தி ஜெயலலிதா உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் 15 மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடலூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 15 மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதற்காக அந்த மருத்துவமனைகளில் 105 சிறப்பு மேல்சிகிச்சை மருத்துவர்கள், 183 சிறப்பு மருத்துவர்கள், 60 மருத்துவர்கள், 3 பல் மருத்துவர்கள் மற்றும் 443 செவிலியர்கள், 14 ஆய்வக நுட்பனர்கள் மற்றும் 18 நுண்கதிர் விச்சாளர் பணியிடங்களை உருவாக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவுகளை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் 84 மருத்துவர்களையும், 54 அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 167 செவிலியர்களை நியமிக்கவும் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை 400 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும், இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு 440 ரூபாயிலிருந்து 700 ரூபாயாகவும், மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு 480 ரூபாயிலிருந்து 800 ரூபாயாகவும் உயர்த்தி அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே முகாம்களில் வசிக்காமல் உள்ளூர் காவல் நிலையங்களில் அகதிகளாக பதிவு செய்துள்ள இலங்கை தமிழர்களுக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்த ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
Category: மாவட்ட செய்தி
0 comments