இலங்கைக்கு இந்தியா போர்க்கப்பல் வழங்குவதா? - ஜவாஹிருல்லா கண்டனம்!
இலங்கையின் கப்பற்படைக்கு வலுவூட்ட இரு போர்க்கப்பல்களை இந்தியா வழங்குவதற்கு மனித நேய மக்கள் கட்சியின் சட்டப் பேரவைத் தலைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை முழு விவரம்:
இலங்கை கடற்படைக்கு இரு போர்க்கப்பல்களை வழங்க இந்தியா முடிவு செய்திருப்பதாகவும், கோவாவில் உள்ள அரசுக்குச் சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டு வரும் இந்தப் போர்க்கப்பல்கள் வரும் 2017–18ஆம் ஆண்டில் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
தமிழக மீனவர்களை கைது செய்வதும், தாக்குவதும், சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கைக்கு கப்பல்களை வழங்குவதை வன்மையாக கண்டிக்கிறேன். இப்போர்க் கப்பல்களை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவே இலங்கை பயன்படுத்தக்கூடும்.
மேலும் இந்திய எல்லையில் அத்துமீறம் சீனாவிற்கு ஆதரவாக இலங்கை விளங்கி வருகிறது. இலங்கை கடல் பாதுகாப்பிற்கு அளிக்கும் போர்க்கப்பல்கள் சீனாவிற்கு உதவியாக செயல்படும் என்ற சந்தேகம் வலுப்பட்டுள்ளது. எனவே, இலங்கைக்கு போர்க் கப்பல்களை வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
Category: மாநில செய்தி


0 comments