தொடங்கியதா போர்? - சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்!
டமாஸ்கஸ் : சிரியா மீது வீசப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள இஸ்ரேல் அமெரிக்க உதவியுடனே தாம் செய்ததாக கூறியுள்ளதும், ரஷ்யா இஸ்ரேல் வீசிய ஏவுகணைகளை வீழ்த்தியதாக கூறப்படுவதும் சிரிய போர் ஆரம்பித்து விட்டதோ எனும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறி சிரிய அரசின் மீது போர் தொடுக்க அமெரிக்கா ஆயத்தமாகி வருகிறது. இச்சூழலில் இன்று காலை இரு ஏவுகணைகள் மத்திய தரைக்கடலில் விழுந்ததாக ரஷ்யா கூறியது. தாம் ஏவுகணைகளை ஏவவில்லை என்று அமெரிக்கா மறுத்தாலும் அமெரிக்க ஒத்துழைப்புடன் பரிசோதனை முயற்சியாக தாம் ஏவியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
மேலும் இஸ்ரேல் வீசிய ஏவுகணைகளை ரஷ்யா தன் ரேடார் துணை கொண்டு அழித்ததாக கூறப்படும் தகவலை ரஷ்யா உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. சிரியாவுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தாலும் தற்போது பின் வாங்கும் போக்கில் உள்ள அமெரிக்காவை எப்படியாவது சிரியா மீது போர் தொடுக்கும் வண்ணம் இஸ்ரேல் ஏவுகணைகளை வீசியிருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சவுதி மீது தாக்குதலுக்குத் தயாராகிறது ரஷ்யா?
சிரியா மீது மேற்கு நாடுகள் தாக்குதல்களை ஆரம்பித்தால் சவுதி அரேபிய நிலைகளை முழுப் பலம் கொண்டு தாக்கியழிக்கும் படி ரஷ்ய அதிபர் புடின் கட்டளையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவுக்கு எதிராக செச்னிய தீவிரவாதிகளை தூண்டிவிடுவோம் என சவுதி இளவரசர் தெரிவித்ததாக லெபனான் ஊடகங்களில் வெளியாகிய தகவல்கள் ரஷ்ய தலைமையை உசுப்பேற்றியுள்ளதாக ஊடக கருத்துக்கள் கூறும் அதே வேளை சிரியாவுக்கான ஆதரவை ரஷ்யா விலக்கிக்கொள்ளுமிடத்து பாரிய பொருளாதார விட்டுக்கொடுப்புகளுக்கான உடன்படிக்கையொன்றுக்கும் சவுதி அரேபியா முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.Category: உலக செய்தி
0 comments