திருச்சியில் பரபரப்பு AIR INDIA EXPRESS விமானத்தில் திடீர் கோளாறு 186 பயணிகள் உயிர் தப்பினர்!!

திருச்சி, செப். 3:
திருச்சி ஏர்போர்ட்டில் ரன்வேயில் ஓடிய துபாய் விமானம், வானில் ஏறும் முன் தொழில் நுட்ப கோளாறால் நின்றுவிட்டது. இதனால் 186 பயணிகள் உயிர் தப்பினர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. திருச்சியில் இருந்து துபாய்க்கு தினமும் காலை 8.20 மணிக்கு ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் நேற்று காலை புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 186 பயணிகள் இருந்தனர். இவர்களின் உடைமைகள், பாஸ்போர்ட் ஆகியவற்றை பரிசோதித்த பின்னர் பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
ஆனால் விமானம் புறப்படவில்லை. ஏன் புறப்படவில்லை என்று பயணிகளுக்கு தெரிவிக்கப்படவும் இல்லை. இதனால் பயணிகள் காலை 10 மணியளவில் பணிப்பெண்களிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விமானத்தில் சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது, என்ஜினியர்கள் பழுது பார்த்து வருகின்றனர். விரைவில் விமானம் புறப்படும் என கூறினர். அதன்பின்னரும் விமானம் புறப்படாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறங்கினர். அங்கிருந்த விமான நிலைய மேலாளரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த மேலாளர், விரைந்து தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய கூறினார்.
அதை தொடர்ந்து விமானம் 12 மணியளவில் பழுது நீக்கப்பட்டதாக கூறினர். ஆனால், விமானம் துபாய் செல்லாது. மும்பை சென்று அங்கு மீண்டும் கோளாறை சரி செய்து கொண்டு அங்கிருந்து துபாய் செல்லும் என கூறினர். பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டதை அடுத்து விமானம் புறப்பட தயாராகி ரன்வே நோக்கி சென்றது. ஆனால் சிறிது நேரத்தில் விமானம் மேலே எழும்பாமல் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து நின்றது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிலையத்திற்குள் வந்து மீண்டும் விமான நிலைய மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாற்று விமானம் ஏற்பாடு செய்வதாக கூறி பயணிகள் அனைவரையும் பஸ்சில் ஏற்றி, ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டு அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
பின்னர் அங்கு வந்த விமான நிலைய அதிகாரிகள் மாற்று விமானம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இரவு 7 மணிக்கு புறப்படும் என கூறி அனைவரையும் மீண்டும் விமான நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் பரபரப்பு
உயிருடன் விளையாடுவதா
பயணிகள் கோபம்
இது குறித்து மயிலாடுதுறையை சேர்ந்த எலக்ட்ரிக்கல் என்ஜினியர் முத்துகிருஷ்ணன் என்பவர் கூறுகையில், நான் அபுதாபில் உள்ள நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணியில் உள்ளேன். 8.20க்கு புறப்பட வேண்டிய விமானம் 11.30 மணிவரை புறப்படாமல் இருந்தது. இது குறித்து கேட்ட போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. சரி செய்த பின்னர் மும்பை சென்று கோளாறை சரிசெய்த பின்னர் அங்கிருந்து துபாய் செல்லும் என கூறினர். துபாய் செல்லாத விமானம் எப்படி மும்பை செல்லும் என கேட்ட போது அதிகாரிகள் பதில் கூற மறுத்தனர். பின்னர் சரி செய்து விட்டதாக கூறி விமானத்தில் அனைவரையும் ஏற்றினர். ரன்வேயில் சென்ற பின்னர் கோளாறு நீங்கவில்லை என கூறி விமானத்தை நிறுத்திவிட்டனர். விமானம் மேலே எழும்பி நடுவானில் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் நிர்வாகம் பதில் கூறுமா. 186 பயணிகளின் உயிருடன் விமான நிலைய அதிகாரிகள் விளையாடி உள்ளனர் என்றார்.

Category: மாநில செய்தி
0 comments