எறையூர் சர்க்கரை ஆலையில் ரூ128கோடியில் இணை மின் உற்பத்தி திட்ட கட்டுமானப்பணி-கலெக்டர் ஆய்வு!
பெரம்பலூர்,ஜூலை 6:
பெரம்பலூர் எறையூர் சர்க்கரை ஆலையில் மேற்கொள் ளப்பட்டுவரும் ஆலை விரிவாக்கப்பணிகள் மற்றும் ரூ128கோ-டி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள இணைமின் உற்பத்தி திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை கலெக்டர் தரேஸ் அகமது நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் எறையூர் சர்க்கரை கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக சர்க்கரை உற்பத்திப் பணியினை மேற்கொண்டு வரும் பொதுத்துறை நிறுவனமாகும். ஆலையின் சர்க்கரை உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காகத் திட்டமிட்டு அரசால் இந்த விரிவாக்கப்பணிகள் தொடங்கப்பட்டது. இந்தப்பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. அதே போல எறையூர் சர்க்கரை ஆலையில் ஆலைக்கழிவுகளைக் கொண்டு ரூ128கோடி மதிப்பீட்டில் புதிதாக இணைமின் உற்பத்தித்திட்டத்தை அரசு கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
இந்த இணைமின் உற்பத்தித்திட்டம் முழுமையடைந்தால், 18 மெகாவாட் மின் சாரத்தை உற்பத்தி செய்வதோடு, அதிலிருந்து ஆலைக்குத் தேவையான மின்சாரத்தை இந்தத் திட்டத்தின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். எஞ்சிய மின்சாரத்தை அரசுக்குத் திரும்ப வழங்கவும் முடியும். இந்த இணைமின் உற்பத்திக்கான பணிகள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடந்து வந்த நிலையில், அதனை கடந்த மாதம் சுட்டிக்காட்டிய தினகரன் நாளிதழ், பணிகள் விரைந்து நடைபெற மாவட்ட நிர்வாகம் அக்கரைகாட்ட வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கலெக்டர் தரேஸ்அகமது உத்தரவின் பேரில் இணைமின் உற்பத் திட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்தால் ஆலையின் அறவைத்திறன் அதிகரிப்பதோடு, கூடுதல் மின்வசதி பெறப்படும். நேற்று இந்த கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் தரேஸ்அகமது, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து அடுத்த அறவைப்பருவத்திற்குள் விவசாயிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர ஆலைநிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
முன்னதாக எளம்பலூரில் அமைக்கப்பட்டுவரும் அரசு ஆரம்ப சுகாதாரநிலைய கட்டுமானப் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் எறையூர் சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி இந்துமதி, தலைமைப்பொறியாளர் தங்கவேல் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments