பெரம்பலூர் நகரில் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் அவதி!
பெரம்பலூர் நகரில் உள்ள பிரதான சாலைகளில் பார்க்கிங் வசதி இல்லாததால் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறுகிறது.
பெரம்பலூர் நகரில் சங்குப்பேட்டை, கடைவீதி, பழைய பேருந்து நிலையம், தலைமை அஞ்சல் அலுவலகத் தெரு, என்.எஸ்.பி சாலை, மாரக்கெட் தெரு, வடக்கு மாதவி சாலை மற்றும் எளம்பலூர் சாலை ஆகிய பகுதிகள் பிரதான சாலைகளாக விளங்குகின்றன.
இந்தப் பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதிகளில், ஒரு சில நிறுவனங்களைத் தவிர மற்றவை பார்க்கிங் வசதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் தங்களது வாகனங்களை சாலைகளில் நிறுத்துகின்றனர்.
கடைவீதி வழியாக துறையூர் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், காமராஜர் வளைவு வழியாக சேலம், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கும் பேருந்துகள், கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், இந்த சாலைகளில் 500-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்களும் செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வணிக நிறுவனங்களுக்கு வருவோர் தங்களது வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்துவதால் மேற்கண்ட பகுதிகளில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களும் அவரவர் விருப்பம் போல சாலையின் மையப்பகுதிகளிலேயே வாகனங்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதால் பெரும்பாலான ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
போக்குவரத்து நெரிசலை தடுக்க பொதுவான ஒரு இடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதியை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான வாடகையை பார்க்கிங் வசதியில்லாமல் வணிக நிறுவனம் வைத்துள்ளவர்களிடம் பகிர்ந்து வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், சாலையில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக இரு சக்கர வாகனங்களை நிறுத்துபவர்களையும் கடுமையாக எச்சரித்து, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து மிகுந்த இடங்களில் புதிய கட்டடங்கள், கடைகள் கட்டுபவர்களை பார்க்கிங் வசதியுடன் கட்டுவதற்கே அனுமதிக்க வேண்டும். மாவட்ட காவல் துறை கூடுதலாக போக்குவரத்து போலீஸாரை நியமித்து, நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Category: மாவட்ட செய்தி
0 comments