நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதற்கான புதிய வழிமுறைகள் மின்வாரிய தலைமை பொறியாளர் தகவல்!
திருச்சி,
நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இது குறித்து திருச்சி தென்னூர் பகிர்மான தலைமை பொறியாளர் குமரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மின் கட்டண வசதி
மின் கட்டணம் செலுத்த நுகர்வோர் இனி கால்கடுக்க வரிசையில் நிற்க வேண்டாம். மின்வாரிய இணையதளத்தின் வழியாக ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கரூர் வைசியா வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி, பாங்க் ஆப் பரோடா, எச்.டி.எப்.சி. வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, லெட்சுமி விலாஸ் வங்கி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, கனரா வங்கி, பெடரல் வங்கி ஆகிய வங்கி கணக்கில் இருந்து நேரடியாக மின் கட்டணம் செலுத்தலாம்.
வங்கி ‘டெபிட் கார்டு‘ மூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி மூலம் மின் கட்டணம் செலுத்தலாம். எங்கள் இணையதளத்தின் வாயிலாக எந்த ஒரு வங்கியின் ‘விசா/மாஸ்டர்‘ கடன் அட்டையின் மூலமாக மின் கட்டணம் செலுத்தலாம்.
பணமாக செலுத்தும் முறை
தங்கள் பகுதியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மற்றும் அனைத்து தபால் நிலையங்களிலும் பணமாக செலுத்தலாம். சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைசியா வங்கியில் ‘மொபைல் பேங்க்‘ வசதி பெற்று செலுத்தலாம்.‘ மொபைல் எஸ்.எம்.எஸ்.‘ வசதி பெற்று இந்தியன் வங்கி மூலம் செலுத்தலாம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தங்களுடைய கைபேசி எண்ணை பதிவு செய்யவிருக்கிற மின் நுகர்வோருக்கு, மதிப்பு கூட்டு சேவையாக குறுஞ்செய்தியின் மூலம் அவர்களுடைய மின் கட்டணம் மற்றும் கட்டண செலுத்த கடைசி நாள் போன்ற விபரங்கள் தெரிவிக்கப்படும். ஆகையால் மின் நுகர்வோர் இந்த வசதியை பெற தங்களுடைய கைபேசி எண்ணை தங்கள் பகுதி பிரிவு அலுவலகங்களை அணுகி பதிவு செய்து பயன் அடைய வேண்டும். மேலும் விபரங்களுக்கு www.tneb.in என்ற இணைய தளத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Category: மாநில செய்தி
0 comments