யாசர் அராபத் விஷம் வைத்து படுகொலை விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கை உறுதி செய்தது!

பாலஸ்தீன மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசர் அராபத் 2004 அக்டோபர் மாதம் பிரான்ஸ் சென்றிருந்தார். அப்போது அங்கு உடல் நலக்குறைவு ஏற்பட் டது. முதலில் சாதாரண காய்ச்சல் என கூறப்பட்டது. பின்னர் தொடர்ந்து அவருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. உடனே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக அவரது உடல் நிலை மிகவும் மோசடைந்து வந்தது. திடீரென கை, கால்கள் செயல் இழந்தன. ஒரு கட்டத்தில் அவர் கோமா நிலைக்கு சென்றார்.
பின்னர் 2004 நவம்பர் 11ம் தேதி அவரது உயிர் பிரான்ஸ் ராணுவ மருத்துவமனையிலேயே பிரிந்தது. அப்போதே அராபத்தின் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. பின்னர் அல்-ஜசீரா தொலைக் காட்சி நிறுவனம் அராபத் இறுதி நாட்களில் பயன்படுத்திய ஆடைகளை சுவிட்சர்லாந்திற்கு அனுப்பி அதனை உயிரியல் பரிசோதனைக்கு உட்படுத்தியது.
ஒன்பது மாத கால ஆய்வுக்குப் பின்னர் ‘பொலோனியம் -210’ என்ற அணுஉலைக்கு பயன்படும் கொடிய விஷத்தை பயன்படுத்தி அவர் கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் அவரது மனைவி சுஹா, யாசர் அராபத் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தை நாடினார். அதே நேரம் அராபத்தின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யவேண்டும் பாலஸ்தீன ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து யாசர் அரபாத்தின் உடலை தோண்டியெடுத்து மீண்டும் பரிசோதனை செய்ய பாலஸ்தீன அரசு நிர்வாகம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பாலஸ்தீன விசாரணைக்குழு தலைவர் தவ்பிக்திரவி மற்றும் ரஷ்யா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்தை சேர்ந்த அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர் குழுவினர் மற்றும் விஞ்ஞானிகள் அராபத்தின் கல்லறையில் இருந்து உடலை தோண்டி எடுத்து மாதிரிகளை சேகரித்து தனித்தனியே ஆய்வு செய்து வந்தனர்.
இதன் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்தின் லாவ்சேனில் உள்ள கதிரியக்க இயற்பியல் துறை மற்றும் சட்ட மருத்துவப் பல்கலைக்கழக மையத்தில் 8 விஞ்ஞானிகள் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆய்வில், யாசர் அராபத் அணிந்திருந்த உள்ளாடைகள், தலைப்பாகை, டூத் பிரஷ், மருத்துவமனையில் அவர் பயன்படுத்திய உடைகள் மற்றும் தோண்டி எடுக்கப்பட்ட அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
இந்த ஆய்வு முடிவுகளை புதனன்று ஜெனிவாவில் சுவிட்சர்லாந்து ஆய்வுக்குழுவினரிடம் அராபத் மனைவி சுஹா பெற்றுக் கொண்டார். பாரீஸ் வந்த அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது :-எனது கணவர்(யாசர் அராபத்) இயற்கையாக மரணமடையவில்லை. அவர் ‘பொலோனியம்-210’ என்ற கொடிய விஷத்தன்மையுள்ள கதிரியக்க தனிமம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கிறார் என்பது அறிவியல் பூர்வமான ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான ஆதாரம் என்னிடம் தற்போது உள்ளது.
இது மிக மோசமான அரசியல் படுகொலை என்பது தற்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது. இந்த படுகொலை தொடர்பாக எந்த நாட்டையும் எந்த தனிநபரையும் நான் குற்றம்சாட்ட விரும்பவில்லை. அவருக்கு ஏராளமான எதிரிகள் இருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.2003ம் ஆண்டு மட்டும் 13 முறை அவரைக் கொலை செய்ய முயன்றனர்.
அதிலிருந்து அவர் தப்பித்தார். மொத்தம் 40 முறை அவரை கொலை செய்ய முயற்சிகள் அரங்கேற்றப்பட்டன. இந்நிலையில், 2004ம் ஆண்டு பிரான்ஸ் சென்றிருந்த போது அவருக்கு ‘பொலோனியம் 210’ விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கிறார். இந்த பொலோனிய கதிரியக்க தனிமத்தை புகைப்பிடிக்கும் குழல், குடிநீர், உணவு, கண்மருந்து, டூத்பேஸ்ட் ( பற்பசை ) போன்ற ஏதாவது ஒன்றில் கலந்து யாசர் அராபத்திற்கு கொடுத்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதே போல் ரஷ்ய ஆய்வு குழுவினர் மேற்கொண்ட சோதனையிலும் பொலோனியம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் ஆய்வுகுழுவினர் ஆய்வு முடிவினை இன்னும் வெளியிடவில்லை.
Thanks:- தீக்கதிா்
Thanks:- தீக்கதிா்
Category: உலக செய்தி
0 comments