பெரம்பலூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்- தூக்கத்தில் சுகாதாரத்துறை!

பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் நோய் பரவுகிறது. 10-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
டெங்கு காய்ச்சல்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட மேலசீனிவாசபுரம், அம்பேத்கர்நகர், இந்திரா நகர், கிள்ளிவளவன் தெரு, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவனை மற்றும் கிருஷ்ணாபுரம் அரசு வட்டார தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 8 ஆண்கள், 3 பெண்கள், ஒருவயது கைக்குழந்தை உள்பட 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒரு வயது குழந்தை திருச்சி தனியார் மருத்துவமனையிலும், மற்றவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் சிகிச்சை பெற்று வீடுதிரும்பி உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
தடுப்பு நடவடிக்கை
இது குறித்து சுகாதாரத்துறையினரிடம் கேட்டபோது, பூலாம்பாடியில் இருவாரங்களுக்கு முன்பு 30-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதாகவும், அதனைத்தொடர்ந்து மருத்துவக்குழுவினர் முகாமிட்டு தீவிர தடுப்புபணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் என்பது உறுதி செய்யப்பட்டதும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் வாயிலாக தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம், அரணாரை பகுதியிலும் சுற்றுப்புற கிராமப்புறங்களிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments