பெரம்பலூரில் உயர்கல்வி வாய்ப்பிற்கான வழிகாட்டுதல் முகாம் இன்று நடக்கிறது'.
.
பெரம்பலூர்: "பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் உயர்கல்வி வாய்ப்பிற்கான வழிகாட்டுதல் முகாம் இன்று நடக்கிறது' என பெரம்பலூர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
பெரம்பலூர் மாவட்டத்தில் மார்ச் 2013ல் நடந்த ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் 7,839 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி 7,101 பேர் தேர்ச்சி பெற்றனர். கிராமப்புறத்தில் அதிக மாணவ, மாணவிகள் உள்ளதால், அவர்களுக்கு உயர்கல்வியில் என்ன படிக்கலாம்? என்பதை தெரிந்துகொள்ள அதிக வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது.
பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு இல்லாததால் மாணவிகளுக்கு ப்ளஸ் 2 முடித்த உடனே திருமணம் செய்து வைக்கும் நிலை உள்ளது. மாவட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரி, குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி உட்பட உயர் கல்வி வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.
மாணவ, மாணவிகளின் எதிர்காலம் உயர்கல்வியை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளதால், அவர்கள் உயர்கல்வி கட்டாயம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் வல்லுநர்களால் ஆலோசனைகள் அளிக்கப்பட உள்ளது.
எனவே, பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் இன்று காலை 10 மணி முதல் 1 வரை நடக்கும் வழிகாட்டுதல் முகாமில் பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் யூனியன் மாணவ, மாணவிகளும், மாலை 2 மணி முதல் 5 மணி வரை வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை யூனியனை சேர்ந்த மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Category: உயர் கல்வி
0 comments