வங்கி கணக்கு தொடங்க ஒரு முகவரி சான்று போதும்!
மும்பை: வங்கி கணக்கு தொடங்க ஒரு முகவரி சான்று போதும் என்ற விதிமுறையை வங்கிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.வங்கி கணக்கு தொடங்குவதற்கு நிரந்தர மற்றும் தற்காலிக முகவரி சான்று, புகைப்பட சான்று உட்பட பல்வேறு ஆவணங்கள் கேட்கப்படுகின்றன. ஆனால், வேலை நிமித்தமாக வெளியூர்களில் வசிப்பவர்கள், தற்காலிக முகவரி சான்று இல்லாததால் வங்கி கணக்கு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, இவர்களுக்கு உதவும் வகையிலும், நடைமுறைகளை எளிமையாக்கும் முயற்சியாகவும் ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் மாதத் தில் புதிய விதிமுறை களை வெளியிட்டது.
அதன்படி, வங்கி கணக்கு தொடங்குபவர்கள் தற்காலிக முகவரி சான்று அல்லது நிரந்தர முகவரி சான்று ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் சமர்ப்பித்தால் போதும் என்று உத்தரவிட்டது. ஆனால், சில வங்கிகள் வாடிக்கையா ளர் நிரந்தர முகவரி சான்று சமர்ப்பித்தபோதும், தற்காலிக முகவரி சான்றும் அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து ரிசர்வ் வங்கி தனது உத்தரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. வெளியூரில் இருந்து வந்து பணியாற்றும் பலர் வங்கிகள் இரண்டு முகவரி சான்றுகள் கேட்பதால் வங்கி கணக்கு தொடங்க முடியாமல் போகிறது. இத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே ரிசர்வ் வங்கி புதிய நெறிமுறைகளை வகுத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் கணக்கு துவங்க ஊக்குவிக்கும் வகையில் வங்கிகள் கண்டிப்பாக புதிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். எனவே, ஒரு முகவரி சான்றை மட்டும் பெற்றுக்கொண்டு கணக்கு துவங்கலாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கிகள் தனது அனைத்து கிளைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். எந்த வகையிலும் இரண்டு முகவரி சான்றுகள் கேட்டு கட்டாயப்படுத்த கூடாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Category: மாநில செய்தி
0 comments