பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளின்றி பயணிகள் அவதி!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளின்றி பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம், இப்போதும் அதே நிலையில் காணப்படுகிறது. இங்கு, பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்காக எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை.
கழிப்பறை, குடிநீர் வசதி, பயணிகள் ஓய்வெடுக்கும் அறை மற்றும் பாதுகாப்பு அறை உள்ளிட்டவை ஏற்படுத்தப்படவில்லை. கட்டணக் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதோடு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆண்களுக்கென இலவச, கட்டண கழிப்பறைகள் பராமரிக்கப்படாததால், திறந்தவெளியே கழிப்பறையாக மாறி இந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
பல்வேறு மாவட்டங்களிலிருந்து தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இங்கு வந்து செல்லும் நிலையில், இரவு 11 மணிக்கு மேல், பெரம்பலூர் கிராமப் பகுதிகள் மட்டுமின்றி, நகர்ப் பகுதிக்கும் பேருந்து வசதி கிடையாது. இதனால், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பயணிகள் இரவு நேரங்களில் தங்குவதற்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் அவதிப்படுகின்றனர். நகை, பணம் பறிப்பு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
எனவே, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இரவு நேரங்களில் நகரப் பேருந்துகளை இயக்கி பயணிகள் பாதுகாப்பாக வீட்டிற்குச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Category: மாவட்ட செய்தி
0 comments