வேலை வாய்ப்புக்கான வரப்பிரசாதம் ‘சோஷியல் மீடியா’!!!
பிளே ஸ்கூல், எல்.கே.ஜி., முதல் கல்லூரி அட்மிஷன், கேம்பஸ் இன்டர்வியூ, பதவி உயர்வு, ஊதிய உயர்வு என வாழ்க்கை முழுவதும் எங்கும் போட்டி, எதிலும் போட்டி!
அதில் எந்தளவுக்கு நாம் வெற்றிபெறுகிறோம் என்பது வேறு விஷயம். ஆனால் போட்டியை சந்திப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது மட்டும் நிஜம்.
வேலைக்கான போட்டி
வேலைக்கு பிறகு சந்திக்கும் போட்டிகள் ஒருபுறம் இருக்க, வேலைக்கான போட்டி இன்றைய இளைஞர்களை பாடாய் படுத்துகிறது. கடனை வாங்கி, கஷ்டப்பட்டு தங்களது குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோரின் பொதுவான கனவு என்னவாக இருக்க முடியும்... படித்து முடிப்பதற்கு முன்பாகவே, சிறந்த நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் தங்களது பிள்ளைகள் எப்படியாவது வேலை வாங்கிட வேண்டும் என்பதாகத்தானே இருக்கிறது?
பெரும்பாலான பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்ப்பது போல் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைப்பது என்பது சில விகிதத்தினருக்கு மட்டுமே சாத்தியமாகிறது. அப்படியானால், மற்றவர்கள் என்னதான் செய்வது? எப்படி வேலை பெறுவது? இதுதான் இன்றைய பிரதான கேள்வி.
தொழில்நுட்பம் இருக்கு...
கிட்டத்தட்ட உலகில் நிலவிய பலவற்றை இன்று தொழில்நுட்பம் மாற்றிவிட்டது. அதுவே இன்றைய வெற்றியாளராக வலம் வருகிறது. டேட்டா டிரான்ஸ்பரின் வேகம் 3ஜி, 4ஜியையும் கடந்து 5ஜிக்கு வித்திடப்பட்டுவிட்ட நிலையில், நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்யும் முறையிலும் தொழில்நுட்பம் பிரதான பங்கு வகிக்கிறது.
முன்பெல்லாம், வேலை தரும் நிறுவனங்களுக்கும், வேலையை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கும் பாலமாக விளங்கியது இதற்காகவே துவங்கப்பட்ட ‘ஜாப் போர்ட்டல்ஸ்’ எனும் பிரத்யேக வேலைவாய்ப்பு தளங்கள். இதுபோன்ற வேலைவாய்ப்பு இணையதளங்களையே பெரும்பாலான நிறுவனங்களும் சரி, இளைஞர்களும் சரி நம்பியிருந்தனர். ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. அவற்றிற்கும் போட்டி வந்துவிட்டதே!
நிறுவனங்களின் புதுப்போக்கு
பேஸ்புக், டிவிட்டர், லிங்கிட் இன் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்களுக்கான ஆட்களை தேர்வு செய்துகொள்கின்றன என்கிறது ஆய்வுகள். அதற்கேற்ப, புரொபஷன்ல்களின் நெட்வொர்க்கை விரிவடைய செய்வதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ள ‘லிங்கிட் இன்’ தற்போது படு வேகமாக வளர்ந்துவருகிறது. எனவே, கமென்ட், லைக், ஷேர், பாலோ ஆகியவற்றிக்காக மட்டுமல்ல இன்றைய சமூக வலைதளங்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் மறந்துவிடக்கூடாது.
இதுபோன்று சமூக வலைதளங்கள் வழியாக நடைபெறும் ஆட்களுக்கான தேர்வு முறை, வரும் காலத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். மேலும், ‘வேலை தரும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தகுதியான நபர்களை தாங்களே தேர்வு செய்துகொள்ள சோஷியல் மீடியாக்களை நாடத்தொடங்கியுள்ளன. இதன்மூலம், பணியாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களது திறமையை அறிந்து அதற்கேட்ப வாய்ப்பளிக்க சோசியல் மீடியா சிறப்பான வாய்ப்புகளை வழங்குகிறது’, என்கின்றனர்.
குறைந்த செலவில், குறிப்பிட்ட நேரத்தில், தகுதியான நபர்களை கண்டறிய முடிவதும், அவர்களை பற்றி அதிகம் அறிந்துகொள்ள முடிவதும், இதன்மூலம் தங்களது நிறுவனத்தின் பெயருக்கும் ஒரு அங்கீகாரம் கிடைப்பதும் என ஏராளமான அம்சங்களை, எந்த நிறுவனம் தான் ஏற்க மறுக்கும்.
இந்த ‘டிரென்ட்’ மாறுமா?
தற்போதைய இந்த ‘டிரென்ட்’ உடனடியாக மாறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. எனவே, நிறுவனங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தங்களது சோசியல் புரொபைலை தரமாக தயாரித்து, ‘அப்டேட்’ செய்யுங்கள். அதோடு நின்றுவிடாமல், தொடர்ந்து சோசில் மீடியாவில் இணைந்துள்ள நிறுவனங்களின் பார்வையில் உங்களது ‘புரொபைல்‘ படும்படி பார்த்துக்கொள்ளுங்கள்; பிறகு வேலை தேடி, படியேற வேண்டிய அவசியம் இருக்குமா என்ன?
இனிமேலும் நண்பர்கள், உறவினர்களுடன் ஹாயாக சென்ற ஜாலி டூர் போட்டோக்களை போடுவதற்கும், காலையில் 10 மணிக்கு எழுந்து பல் துலக்குவது முதல் ‘லேட் நைட்’டில் சாப்பிடாமல் தூங்கச் செல்வது வரை ‘அப்டேட்’ செய்வதற்கும், அதற்கும் ஆயிரம் ‘லைக்’ வாங்குவதற்கும்தான் சோசியல் மீடியாவை வாடிக்கையாக கொண்டீர்கள் என்றால் அது வேடிக்கை தான்!
Category: மாணவர் பகுதி


0 comments