குன்னம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் மூன்று பேர் தற்கொலை!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் திங்கள், செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டனர்.
குன்னம் அருகே உள்ள வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி மகன் திருமுருகன் (32). கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம்.
மேலும், கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், அதற்குரிய சிகிச்சை பெற்றும் பலன் இல்லாததால், திங்கள்கிழமை விஷம் குடித்தார். இதையறிந்த அவரது உறவினர்கள் லப்பைகுடிகாட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர் அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து குன்னம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
விஷம் குடித்து பெண் தற்கொலை:
குன்னம் அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி பிரியா (21). இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. கண்ணதாசன் வெளிநாட்டில் உள்ளதால், அவரது சொந்த கிராமமான தொண்டப்பாடியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார் பிரியா. கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பிரியா, திங்கள்கிழமை விஷம் குடித்தார். சிகிச்சைக்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து குன்னம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
பிரியாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால், சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மாணவர் தற்கொலை:
மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் புண்ணியமூர்த்தி (19). பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்த இவருக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்ததாம்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை ஏற்பட்ட வலியால் அவதிப்பட்ட புண்ணியமூர்த்தி திங்கள்கிழமை மாலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அவரது பெற்றோர், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு, அவர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து மருவத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments