சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை டிராலியில் பதுக்கி விட்டு விடிய விடிய திண்டாடிய ஆசாமி: திருச்சி ஏர்போர்ட்டில் ருசிகரம் !
திருச்சி: சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த தங்க கட்டியை சோதனைக்கு பயந்து டிராலியில் பதுக்கி வைத்த ஆசாமி, அதை விடிய விடிய தேடிய சம்பவம் திருச்சி ஏர்போர்ட்டில் நடந்துள்ளது. திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து ஒரு விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது. பயணிகளின் ஆவணங்கள், உடமைகளை இமிகிரேசன், வான்நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது 70 கிராம் தங்க கட்டியை கொண்டு வந்த பயணி ஒருவர், சோதனை நடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் ஒரு டிராலியின் கைப்பிடி குழாய்க்குள் தங்க கட்டியை மறைத்து வைத்தார். அது யாருக்கும் தெரியவில்லை. சோதனைகள் முடிந்து வெளியே வந்து பொருட் களை எடுத்துக் கொண்டு பார்த்த போது, தங்கத்தை மறைத்து வைத்திருந்த டிராலியை காணவில்லை. இதனால் அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். சோதனை முடிந்து அவர் வருவதற்குள் விமான நிலைய ஊழியர்கள் டிராலியை ஒதுக்குப்புறமாக வைத்ததால் அவரால் கண்டுபிடிக்க முடிய வில்லை.
அதிர்ச்சி அடைந்த பயணி, இரவு ஏர்போர்ட் டில் தங்கியிருந்து காலை வரை ஒவ்வொரு டிராலியாக தேடினார். பயணியின் நடவடிக்கையை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உன்னிப்பாக கவனித்து வந்தனர். இறுதியில், ஒருவழியாக தேடி தங்க கட்டியை பயணி எடுத்துவிட்டார். இதை கவனித்து வந்த பாதுகாப்பு படையினர் கையும், களவுமாக அவரை பிடித்தனர். தங்கத்துடன் விமான நிலைய வான்நுண்ணறிவு சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதிகாரிகள் விசாரணை நடத்தி பயணியிடம் அபராதம்வசூலித்தனர்.
Category: மாநில செய்தி
0 comments