+2 தேர்வை நன்றாக எழுதினால் மாணவ–மாணவிகளின் எதிர்கால வாழ்க்கை சிறப்பானதாக அமையும் கலெக்டர் தரேஸ் அஹமது பேச்சு!
பிளஸ்–2 தேர்வை நன்றாக எழுதினால் மாணவ, மாணவிகளின் எதிர்கால வாழ்க்கை சிறப்பானதாக அமையும் என்று கலெக்டர் தரேஸ்அஹமது கூறினார்.
சிறப்பு பயிற்சி
பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை காட்டிலும் பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் அதிக அளவில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ‘சூப்பர் 30 வகுப்புகள்’ உருவாக்கப்பட்டு அதில் படித்த மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பாடங்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
மாணவ, மாணவிகளின் நலன் கருதி இந்த ஆண்டு எஸ்.ஆடுதுறை மற்றும் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் ‘சூப்பர் 30 வகுப்புகள்’ நடத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார். அதன்படி எஸ்.ஆடுதுறை மற்றும் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ‘சூப்பர் 30 வகுப்புகள்’ நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு பள்ளிகளிலும் மொத்தம் 40 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
எதிர்கால வாழ்க்கை
மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது குரும்பலூர் மற்றும் சு.ஆடுதுறை அரசு மேல்
நிலைப்பள்ளிக்கு சென்று ‘சூப்பர் 30 வகுப்பில்’ படிக்கும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது;–
‘சூப்பர் 30 வகுப்பில்’ சேர்ந்து படிக்கும் நாட்களில் வீட்டிற்கு செல்லாது பள்ளிகளில் அரசு விடுதிகளில் தங்கி படிக்க வேண்டும். விடுமுறைகள், பண்டிகைகள் ஆண்டு தோறும் வந்து கொண்டிருக்கும். ஆனால் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் வாய்ப்பு ஒருமுறைதான் வரும். இந்த வாய்ப்பினை நாம் எவ்வாறு பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதை பொருத்தே நமது எதிர்கால வாழ்க்கை நிர்ணயிக்கப்படும்.
உதவிகள் செய்ய தயார்
எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் இனி வரும் நாட்களில் விடுமுறைகளை தியாகம் செய்து, வீட்டுச்சூழல்களை மறந்து படிப்பில் மட்டுமே முழு கவனத்தை செலுத்த வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். நீங்கள் படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது. எனவே இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Category: மாணவர் பகுதி, மாவட்ட செய்தி
0 comments