சார்ஜாவில் இருந்து சென்னைக்கு 1½ கிலோ தங்கம் கடத்தல் வாலிபர் கைது!
ஆலந்தூர்,
சார்ஜாவில் இருந்து சென்னைக்கு நூதன முறையில் 1½ கிலோ தங்கத்தை கடத்தி வந்த வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.சார்ஜா விமானம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலையடுத்து கடந்த சில தினங்களாக சுங்க இலாகா அதிகாரிகளும், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கடந்த வாரம் 3 நாட்கள் தொடர்ந்து நடத்திய சோதனையில் மட்டும் 20 கிலோ தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னை சூளைமேட்டை சேர்ந்த யஸ்வந்த்(வயது 32) என்பவர் சுற்றுலா விசாவில் சார்ஜா சென்று விட்டு திரும்பி வந்தது தெரிந்தது.தங்கம் கடத்தல்
அவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர், முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து யஸ்வந்தை தனியாக அழைத்துச் சென்று அவரிடம் இருந்த உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.
பின்னர் அவரது ஆடைகளை கழற்றி சோதனை செய்தனர். அவர் அணிந்திருந்த சட்டை அதிக எடையுடன் இருந்தது. எனவே சட்டையின் உள்புறம் பார்த்த போது அங்கு ஏராளமான பைகள் வைக்கப்பட்டு அதில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து நூதன முறையில் கடத்தி வந்தது தெரிய வந்தது. அது வெளியில் தெரியாமல் இருக்க சட்டையின் மேல் கோட்டு அணிந்து வந்ததும் தெரிந்தது.வாலிபர் கைது
அவரிடம் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் தங்க கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக யஸ்வந்தை அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் அவர், அந்த தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தார்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Category: மாநில செய்தி
0 comments