சென்னை விமான நிலையத்தில் தங்க பேரீச்சம்பழம் கடத்தியவர் கைது!
சென்னை: பேரீச்சம்பழத்தில் இருந்த நிஜமான கொட்டைகளை எடுத்துவிட்டு, அதே வடிவில் தங்கத்தை உருக்கி பேரீச்சம் பழ தோலில் மறைத்து தங்க பிஸ்கட்களை கடத்தி வந்த கேரள நபரை சுங்கத் துறையினர் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து ஏர்,இண்டியா விமானம் நேற்று காலை 8 மணிக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், கேரள மாநிலம் காசர்கோட் பகுதியை சேர்ந்த முகமது உசேன் (22), என்பவர் சுற்றுலா பயணியாக துபாய்க்கு சென்றுவிட்டு சென்னை வந்தார். சுங்க அதிகாரிகளுக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. துபாயில் இருந்து நேரடியாக கேரளா செல்லாமல் சென்னை வந்து கேரளா செல்ல வேண்டிய அவசியம் என்ன என அவரிடம் விசாரணை நடத்தினர். அதற்கு முகமது உசேன், சென்னையில் உள்ள உறவினரை பார்க்க வந்தேன் என்றார். ஆனாலும், அதிகாரிகளுக்கு அவர்மீது சந்தேகம் தீரவில்லை. இதையடுத்து அதிகாரிகள் அவரை முழுமையாக சோதனைக்கு உட்படுத்தினர். ஆனால் அவரது உடமைகள் மற்றும் உடல் பகுதிகளில் இருந்து எதுவும் சிக்கவில்லை.
அதனை தொடர்ந்து அவர் பையில் இருந்து தலா 2 கிலோ எடையுள்ள பேரீச்சம்பழம் பாக்கெட்டை பார்த்தனர். இதையடுத்து அந்த பார்சலை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து பார்த்தனர். அதில் தங்கத்தை உருக்கி, பேரீச்சம்பழம் கொட்டை போல் வடிவமைத்துள்ளனர். அதை சாதாரணமாக பார்க்கும் எவருக்கும், அது பேரீச்சம் பழம் என்றே நினைக்கத் தோன்றும் அளவுக்கு, தங்கத்தை பேரீச்சம் பழத்தின் கொட்டைப்போல தயாரித்துள்ளனர். இதையடுத்து, அந்த இரு பாக்கெட்களில் இருந்து 815 கிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்டை கைப்பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.25 லட்சம். இதனை தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேரீச்சம்பழ பாக்கெட்டில் தங்க பிஸ்கட்களை கடத்தி வந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சூட்கேஸில் பதுக்கி வந்த ரூ.1 கோடி தங்கம் சிக்கியது
துபாயில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த மார்சன் (42) என்பவர் சுற்றுலா பயணியாக துபாய்க்கு சென்று வந்திருந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மார்சனின் சூட்கேசை திறந்து சோதனை செய்தபோது, பக்கவாட்டில் ரகசிய அறைகள் வைத்து, அதற்குள் தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கம்ப்யூட்டருக்கு பயன்படுத்தப்படும் யுபிஎஸ் ஒன்றும் வைத்திருந்தார். அதற்குள்ளும் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தார். மொத்தம் மூன்றரை கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு யி1 கோடி. இதையடுத்து அவரை கைது செய்தனர்.
Category: மாநில செய்தி
0 comments