.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சலுகை விலையில் அம்மா சிமெண்ட்: ஜெயலலிதா அறிவிப்பு!

Unknown | 10:56 PM | 0 comments





சென்னை, செப். 26–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் வகையில், அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர்த் திட்டம், அம்மா உப்பு, அம்மா விதைகள், அம்மா மருந்தகங்கள் என பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது எனது தலைமையிலான அரசு. இந்த வரிசையில், வீடு கட்டும் பொருட்களில் முக்கியமானதாக விளங்கும் சிமெண்டினை குறைந்த விலையில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவது குறித்து அரசு அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்தேன்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சிமெண்ட் உற்பத்தித் திறன்; அந்த நிறுவனங்கள் தற்போது செய்யும் உற்பத்தி; அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரப் பெற்று விற்பனையாகும் சிமெண்ட் ஆகியவை குறித்து நான் கேட்டறிந்தேன்.

தமிழ்நாட்டில் மாதமொன்றுக்கு சராசரியாக 17 முதல் 18 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உபயோகப்படுத்தப்படுகிறது என்றும்; இதில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து மாதமொன்றுக்கு 4 முதல் 4.5 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் வரப் பெற்று விற்பனையாகி வந்தது என்றும்; இது தமிழ்நாட்டில் விற்பனையாகும் மொத்த சிமெண்ட்டில் நான்கில் ஒரு பங்காகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அண்டை மாநிலங்களிலுள்ள சிமெண்ட் நிறுவனங்கள், குறிப்பாக ஆந்திராவில் உள்ள சிமெண்ட் நிறுவனங்கள், சிமெண்ட் விலையை மூட்டை ஒன்றுக்கு 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன என்றும், இது தற்போது மூட்டை ஒன்றுக்கு 310 ரூபாய் என்ற அளவில் ஆந்திர பிரதேசத்தில் விற்கப்படுவதாகவும் கூறப்பட்டது.


இதன் காரணமாக, முந்தைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் சிமெண்ட் அளவு மாத மொன்றுக்கு 1.50 லட்சம் முதல் 3 லட்சம் மெட்ரிக் டன் வரை குறைந்தது. இது முந்தைய வருகையில் 35 முதல் 60 விழுக்காடு மட்டுமே ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சிமெண்ட் விலையை ஏற்றுவதற்கு உரிய சாதகமான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிமெண்ட் விலை ஏற்றத்தினால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சலுகை விலையில் சிமெண்ட் விற்பனை செய்யும் “அம்மா சிமெண்ட் திட்டம்” என்னும் திட்டத்தை செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தின்படி,

1. தமிழ்நாட்டில் உள்ள தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களிடமிருந்து மாதமொன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் கொள்முதல் செய்யப்படும்.

2. இந்த சிமெண்ட் மூட்டைகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 470 கிடங்குகளில் இருப்பு வைத்து மூட்டை ஒன்று 190 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

3. இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோர்கள் 100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் வீதம் அதிகபட்சம் 1500 சதுர அடிக்கு 750 மூட்டைகள் வரை சலுகை விலையில் சிமெண்ட் பெற்றுக் கொள்ளலாம்.

4. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கட்டட திட்ட வரைபடத்தையோ அல்லது கிராம நிர்வாக அலுவலர்–வருவாய்துறை அலுவலர்–பஞ்சாயத்து யூனியன் மேற்பார்வையாளர்–பஞ்சாயத்து யூனியன் சாலை ஆய்வாளரின் சான்றிதழையோ பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

5. வீடுகள் புதுப்பிக்க மற்றும் பழுது பார்க்க 10 முதல் 100 மூட்டைகள் வரை சிமெண்ட் விற்பனை செய்யப்படும்.

6. இத்திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் ஒருங்கிணைப்பு முகமையாக செயல்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முகவர்களாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படும்.

7. இந்த சிமெண்ட் விற்பனை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 220 கிட்டங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 250 கிட்டங்கிகள் மூலம் விற்பனை செய்யப்படும்.

8. மேலும், மாவட்ட விநியோக மற்றும் விற்பனை சங்கங்களுக்கு சொந்தமான கடைகளின் மூலமாக அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 400 மூட்டைகள் இருப்பு வைத்து பொதுமக்களுக்கு சிமெண்ட் விற்பனை செய்யும் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியாளரால் தேர்ந்தெடுக்கப்படும் மகளிர் சுய உதவிக் குழுவின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நடைமுறைப்படுத்தும்.

9. ஊரக வளர்ச்சித் துறையின் கிட்டங்கிகளின் மூலமாக விற்பனை செய்யப்படும் சிமெண்ட்டை பெற்று வழங்கிட, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல–மண்டல மேலாளர் ஒருங்கிணைப்பு முகவராக தொடர்ந்து செயல்படுவார். ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மாவட்டங்களில் செயல்படும் கிட்டங்கிகளின் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் மாவட்ட ஆட்சித் தலைவரால் நியமிக்கப்படுவார்.

10. பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் மூலம் ஒரு மூட்டை சிமெண்ட் 220 ரூபாய் என்ற விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல், இந்தத் திட்டங்களின் பயனாளிகளுக்கும் “அம்மா சிமெண்ட்” திட்டத்தின் கீழ் சிமெண்ட் வழங்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை மூலம் ஏழை, எளிய மக்களின் வீடு கட்டும் சுமை வெகுவாக குறைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1