பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு! தீவிபத்தில் வீடு இழந்தோர் அமைச்சரை முற்றுகை!
பெரம்பலூர், செப்,26:
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் இரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த அதிமுக பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுக்கூட்டம் முடிந்த நிலையில், அருகிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திடீர்ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் தரேஸ்அஹமது, எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் அம்மா உணவகத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். தொடர்ந்து சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்காக செயல்பட்டு வரும் டயாலிசிஸ் சென்டரின் ரத்த சுத்திகரிப்பு நிலையத்தையும், 50 படுக்கை வசதியுடன் உள்ள மகப்பேற்றுக்கு பின்சிகிச்சை நடத்தப்படும் பகுதியினையும் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் பெண்களுக்கான சிகிச்சையின்தரம் குறித்தும், மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர் பார்வையிடுவது குறித்தும் அங்கிருந்தோரிடம் கேட்டறிந்தார். பின்னர் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு சென்று அங்கு புதிதாக வாங்கப்பட்ட சுவாசக் கருவிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய் தார். தொடர்ந்து அமைச் சர், அறுவை சிகிச்சை நிலையத்தினை பார்வையிட்டபோது, கலெக்டர் தரேஸ்அஹமது, அரசு மருத்துவ மனை மருத்துவர்கள், சினைப்பைகட்டி அகற்றும் அறுவை சிகிச்சை, இடுப்பு செயற்கை மூட்டு பொருத்தும் அறுவை சிகிச்சை, முழங்கால் செயற்கை மூட்டு மாற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றை செய்துள்ளது குறித்து விளக்கினர்.
பின்னர் மருத்துவமனையின் பின்பகுதியில் தற்போது விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் 100 படுக்கைகளுடன் கூடிய புதிய தாய்,சேய் மற்றும் மகப்பேறு சிகிச்சை பிரிவிற்கான மூன்றடுக்கு தளம் ரூ3.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின் போது நகராட்சித்தலைவர் ரமேஷ், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி கனகராஜ், நகராட்சித் துணைத்தலைவர் ஆர்டி. ராமச்சந்திரன், இருக்கை மருத்துவ அலுவலர் திருமால் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
தீவிபத்தில் வீடு இழந்தோர் முற்றுகை
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்திவிட்டு மருத்துவமனையில் பின்புறமுள்ள திருநகர் பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கார் ஏறினார். அப்போது கடந்த வாரம் அப்பகுதியில் நடந்த தீவிபத்தில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டோர் அமைச்சரை முற்றுகையிட்டு விரைந்து குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கலெக்டர் அவர்களிடம் தெரித்ததும் அனைவரும் விலகிச்சென்றனர்.
Category:
0 comments