திருச்சி விமான நிலையம் 510 ஏக்கரில் விரிவாக்கம் இயக்குனர் பேட்டி!

திருச்சி விமான நிலைய இயக்குனராக புதிதாக பொறுப்பேற்று உள்ள நகி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விமான நிலைய விரிவாக்கம்
திருச்சி விமான நிலையம் 510 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் தமிழக அரசு இதற்கான நிலத்தை இன்னும் கையகப்படுத்தி தரவில்லை. மாநில அரசு இலவசமாக நிலத்தை கையகப்படுத்தி தருவதாக உறுதி அளித்து இருக்கிறது. மாநில அரசு நிலம் வழங்கியதும் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும். திருச்சி விமான நிலையத்தின் ஓடு பாதை (ரன்வே) தற்போது 8 ஆயிரம் அடியாக உள்ளது. இது படிப்படியாக 12 ஆயிரம் அடி வரை நீட்டிக்கப்படும்.
தொழில் நுட்ப பூங்கா
புதுப்பிக்கப்பட்ட திருச்சி விமான நிலைய முனையத்தின் மூலம் தற்போது 400 பயணிகளை தான் கையாள முடிகிறது. இது விரைவில் 800 பயணிகளை கையாளும் வகையில் விரிவுபடுத்தப்படும். 3-வது ஏரோபிரிட்ஜ் விரைவில் அமைக்கப்படும். பயணிகளின் வசதிக்காக விமான நிலைய வளாகத்தில் விரைவில் சிற்றுண்டி அங்காடி அமைக்கப்பட உள்ளது. விமான நிலையத்தின் தட்ப வெப்ப நிலையை விமானி தெரிந்து கொள்வதற்காக தானியங்கி தொழில் நுட்ப பூங்காவும் அமைக்கப்பட உள்ளது. மேலும் திருச்சி விமான நிலைய வளாகத்தின் முன்பகுதியில் தனியார் பங்களிப்புடன் நவீன பூங்கா அமைக்கப்பட உள்ளது.
பள்ளிகளுக்கு கழிவறை
பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவை ஏற்று திருச்சி விமான நிலையத்தின் சார்பில் சமூக மேம்பாட்டு திட்டப்பணிகளுக்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் முதல் கட்டமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள 40 அரசு பள்ளிகளில் கழிவறை வசதி செய்து கொடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது விமான நிலைய துணை பொது மேலாளர் ஜெபராஜ் உடன் இருந்தார்.

Category: மாநில செய்தி
0 comments