துபாயில் இருந்து திருச்சிக்கு தங்க கட்டிகளை விழுங்கி கடத்திய 2 பேருக்கு ‘வாழைப்பழ வைத்தியம்’!
திருச்சி, செப். 10:
துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் 16 தங்க கட்டிகளை விழுங்கி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பேர் சிக்கினர். அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு வாழைப்பழம் கொடுத்து தங்கத்தை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
துபாயில் இருந்து நேற்று திருச்சி வந்த ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. சோதனையின் போது 2 பயணிகளின் நடைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. மேலும் ஸ்கேனர் கருவியிலும் உடலின் உள்பகுதியில் மர்ம பொருள் இருப்பதாக சிக்னல் காட்டியது. இதையடுத்து அவர்களை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, நம்புதாழாய் பகுதியை சேர்ந்த அப்துல்ரசீது மற்றும் முகமது அஸ்கர் அலி என்பது தெரியவந்தது. இருவரும் தலா 30 கிராம் எடை கொண்ட 16 தங்க பிஸ்கெட்களை ஆளுக்கு 8 வீதம் விழுங்கியதாக கூறியுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம்.
தொடர்ந்து 2 பேரும் ஜேஎம் 1 கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட் கோபிநாத் உத்தரவின் படி திருச்சி அரசு மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இருவருக்கும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு வாழைப்பழம் கொடுத்து தங்கத்தை எடுக்கும் பணியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் விமான நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் 2வது முறை
கடந்த ஜூன் 23ம் தேதி மலேசியாவில் இருந்து திருச்சி வந்த ராமநாதபுரம், தொண்டியை சேர்ந்த 9 பேர் 2.700 கிலோ தங்கத்தை விழுங்கி வந்தது தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9 பேருக்கும் வாழைப்பழ சிகிச்சை மூலம் 4 தினங்கள் போராடி ரூ. 70 லட்சம் மதிப்புள்ள தங்கம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 2வது முறையாக திருச்சி அரசு மருத்துவமனையில் வாழைப்பழ வைத்தியம் நடக்கிறது.
Category: மாநில செய்தி
0 comments