போலி விசாவில் துபாய் செல்ல முயன்ற கேரள பெண் சிக்கினார்! கடந்த 10 நாளில் 7 பேர் பிடிபட்டனர்!
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு துபாய் செல்லும் எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளிடம் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரேஷ்மா பிஜு (37) என்ற பெண், துபாய் செல்ல வந்தார். அவரது பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அது போலியான விசா என்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, ஏஜென்ட் ஒருவர் ரூ.10,000 வாங்கி கொண்டு போலி விசா தயார் செய்து கொடுத்ததாகவும், கேரளாவில் இருந்து செல்லாமல் சென்னை சென்று துபாய் செல்லும்படி அனுப்பி வைத்ததாக கூறினார்.
இதைதொடர்ந்து, அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவருக்கு போலி விசா தயாரித்து கொடுத்த ஏஜென்ட் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாள்களில் சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் மூலம் பயணம் செய்ய முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் சென்னை வந்து பயணம் செய்ய முயன்றபோது சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: மாநில செய்தி
0 comments