இஸ்ரேலின் காஸா கொலைகளை வாய் மூடி மெளனமாக வேடிக்கை பார்க்கும் அரபு நாடுகள்..ஏன்?
கெய்ரோ: இஸ்ரேலின் வெறியாட்டத்தை அரபு நாடுகள் சொல்லி வைத்தாற் போல அமைதியாக கை கட்டி, வாய் மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால், இஸ்ரேலுக்கு ஆதரவாக அவை ஓரணியில் நிற்கின்றன. இதுதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஆனால் ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் எவ்வளவோ பரவாயில்லை என்று அரபு நாடுகள் நினைப்பதால்தான் இப்படி அமைதி காப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்படியாவது ஹமாஸை இஸ்ரேல் அழித்தொழிக்கட்டும் என்று அரபு நாடுகள் நினைப்பதாகவும் கூறப்படுகிறது. நம்மால்தான் ஹமாஸை தட்டி வைக்க முடியாது. இஸ்ரேலாவது அதைச் செய்யட்டும் என்று அரபு நாடுகள் கருதுகின்றன.
2 ஆண்டுகளுக்கு முன்பு ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்தபோது அதற்கு அரபு நாடுகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் இம்முறை அப்படி எந்த எதிர்ப்பும் இல்லாமல் போனதால்தான் இஸ்ரேலின் மூர்க்கத்தனம் அதிகரிக்கக் காரணமாக அமைகிறது.
எகிப்துதான் இந்த இஸ்ரேல் ஆதரவு அரபு நாடுகளின் தலைவர் போல திகழ்கிறது. கடந்த ஆண்டு எகிப்தில் முபாரக்கின் ஆட்சியை கிளர்ச்சியாளர்கள் கவிழ்த்தனர். அவர்களுக்குத் துணையாக ராணுவமும் இருந்தது. இப்போது எகிப்து ராணுவத்தின் வசம்தான் உள்ளது. தற்போது எகிப்து தான் இஸ்ரேலுக்கு முழு ஆதரவாக இருந்து வருகிறது.இதனால்தான் முன்னால் எகிப்தின் தலைவர் மொர்சி விரட்டப்பட்டார்.
அதேபோல ஐக்கிய அரபு எமிரேட்ஸ்இ ஜோர்டான் ஆகிய நாடுகளும் எகிப்துடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக மாறியுள்ளன. சவூதி அரேபியாவும் இந்தப் பட்டியலி்ல் இடம் பெற்றுள்ளது.
ஹமாஸ் தலையெடுத்து விட்டால், வலுவடைந்து விட்டால் தங்களது நாட்டையும் அது பாதிக்கலாம் என்ற அச்சத்தால்தான் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை இந்த அரபு நாடுகள் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வில்சன் மையத்தின் ஆய்வாளரும், முன்னாள் மத்திய கிழக்கு சமரசப் பேச்சுக் குழுவில் இடம் பெற்றவருமான ஆரோன் டேவிட் மில்லர் கூறுகையில், இது வரலாறு காணாத அமைதி. இப்படி ஒரு நிலையை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை இந்த நாடுகள் வேடிக்கை பார்க்க காரணம் உள்ளது. ஹமாஸ்தான் அவற்றின் முக்கிய பயம். அதுதான் இஸ்ரேலுக்கு ஆதரவாக இவர்கள் திரும்பக் காரணம்.
உண்மையில் எகிப்துதான் ஹமாஸுக்கு முக்கிய ஆதரவாளராக ஒரு காலத்தில் திகழ்ந்த நாடாகும். ஆனால் இந்த முறை இஸ்ரேலுக்கு சாதகமான முறையில் அது ஒரு போர் நிறுத்த உடன்பாட்டை அறிவித்தபோது ஹமாஸ் அதிர்ந்து போனது. அந்த திட்டத்தை அது உடனடியாக நிராகரித்தது. அந்தத் திட்டத்தில் இஸ்ரேலின் கோரிக்கைகள்தான் அதிக அளவில் இடம் பெற்றிருந்தன. ஹமாஸின் பரிந்துரை எதுவுமே இடம் பெறவில்லை.
18 மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் அரசியல் ஆய்வாளர்கள் ஒரு எச்சரிக்கையை வெளிப்படுத்தினர். அதாவது அரபு நாடுகளில் ஹமாஸ் அமைப்பு வலுவாகிக் கொண்டு அந்த நாடுகளின் மூலம்இ இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளைத் திருப்ப முயற்சிக்கிறது என்பதுதான் அது.
ஆனால் இந்த எச்சரிக்கையைக் கண்டு இஸ்ரேல் கூட அவ்வளவாகப் பயப்படவில்லை. மாறாக அரபு நாடுகள்தான் பயந்து போயின. காரணம், அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு எங்கே தங்களுக்கு எதிராக மக்கள் திரும்பி விடுவார்களோ என்ற அச்சம். எனவேதான் இந்த முறை இஸ்ரேலின் தாக்குதலை அவர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
இஸ்ரேலைக் கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் ஹமாஸ் வலுவடைந்து விட்டால் அது தங்களுக்குத்தான் பெரும் ஆபத்து. இஸ்ரேலை விட ஹமாஸ்தான் பெரும் மிரட்டல் என்றும் அரபு நாடுகள் கருதுகின்றனவாம்.
தற்போது காஸாவில் அப்பாவி மக்கள் பலியாகி வருவதற்கு ஹமாஸ்தான், அதன் பிடிவாதம்தான் முக்கியக் காரணம் என்று எகிப்து அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் இஸ்ரேலைக் குறை சொல்வதில்லை.
அதை விட மோசமாக எகிப்து நாடு தனது எல்லையை மூடி விட்டது. அங்கிருந்து பாலஸ்தீனத்திதற்குள் உணவு, மருந்து, குடிநீர் என எதையுமே அது அனுமதிக்கவில்லை. இதுவும் காஸா மக்களை அதிர வைத்துள்ளது. கிட்டத்தட்ட யாருமே இல்லாத அநாதைகளின் நிலையில் காஸா மக்கள் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து காஸாவைச் சேர்ந்த சல்ஹான் அல் ஹிரிஷ் கூறுகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதான்யஹுவை விட மோசமானவர் எகிப்து தலைவர் சிஸ்ஸி. யூதர்களை விட மிகக் கொடூரமானவர்கள் எகிப்தியர்கள். எங்களை அழிக்க அவர்கள் சதி செய்து விட்டனர் என்றார் கோபத்துடன்.
இதனால்தான், எமது விடயத்தில் தலையிட எகிப்திற்கு எந்த அருகதையும் கிடையாது என ஹமாஸ் ஹமாஸ் ஏற்கனவே எச்சரித்திருக்கிறது.
எகிப்துக்கு ஹமாஸ் பெரும் பிரச்சினை என்றால் ஐக்கிய அரபு எமிரேட்ஸும், சவூதி அரேபியாவும் வேறு கணக்கில் ஹமாஸை எதிர்க்கின்றன. அதாவது அவர்களின் பரம்பரை எதிரியான ஈரான், ஹமாஸுக்கு பெருமளவில் பொருளுதவி, ஆயுத உதவியை அளித்த நாடாகும். எனவே ஈரான் கை ஓங்குவதைத் தடுக்க அவர்கள் ஹமாஸை எதிர்க்க முடிவெடுத்தன. ஈரான் ஷியா கொள்கையைப் பின்பின்பற்றினாலும், இஸ்ரேலுக்கு எதிரான திடகாத்திரமான கொள்கைகையக் கொண்ட நாடாகும்.
அரபு நாடுகளின் இந்த மாற்றம் காரணமாக சமரசம் பேச வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜோன் கெர்ரியே கூட குழம்பிப் போய் விட்டார். காரணம், ஹமாஸுடன் பேச யாருமே முன்வராத நிலை. இஸ்ரேலும் சொல் பேச்சைக் கேட்பதாக இல்லை. இதனால்தான் சமரசம் பேச வந்த கெர்ரி மீண்டும் அமெரிக்காவுக்கேத் திரும்பிப் போய் விட்டார்.
கட்டார் மாத்திரம் ஹமாஸ் தலைவருக்கு இடமளித்து, அவர்களது அரசியல் நடவடிக்கைக்கு ஓர் தற்காலிக பாதுகாப்பை வழங்கிவருகிறது. இதனால்தான் எப்போதும் இல்லாதவாறு, இஸ்ரேலை எதிர்த்து போராடி வருகிறது.
Category: வளைகுட செய்தி
0 comments