அனைத்து பொறியியல் படிப்புக்களுக்கும் நல்ல எதிர்காலம்: முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
மதுரை: "நன்றாக படித்தால் அனைத்து பொறியியல் படிப்புக்களுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது," என அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: கவுன்சிலிங்கில் படிப்புகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் விருப்பத்தை மாணவர்களிடம் திணிக்கக் கூடாது. படிப்பு மற்றும் கல்லுாரிகளை தேர்வு செய்வதில் பெற்றோர் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
கடந்தாண்டு கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில், எத்தனை மதிப்பெண்களுக்கு எந்தெந்த கல்லுாரிகள் கிடைத்தன என்பதை தெரிந்து கொண்டு, அந்த கல்லுாரிகளில் கல்வித் தரம், கட்டமைப்பு வசதி, சென்றாண்டு தேர்ச்சி விவரங்களை தெரிந்து வைத்திருந்தால், கவுன்சிலிங்கின்போது கல்லுாரியை தேர்வு செய்வது எளிதாக இருக்கும்.
மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உட்பட அனைத்து பொறியியல் படிப்புகளுக்கும் நல்ல மதிப்பு உண்டு. நன்றாக படித்தால் சிறப்பான எதிர்காலம் உள்ளது. நாட்டின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்போது அனைத்து துறைகளும் வளர்ச்சி பெறும். வேலைவாய்ப்பும் கிடைக்கும். அதற்கு ஏற்ப, ஏ.ஐ.சி.டி.இ., மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து உயர்கல்வித் துறை வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டங்கள் வகுக்க வேண்டும்.
துணைவேந்தர் தேர்வு
உயர்கல்வியில் மாணவர்களின் ரோல் மாடல் துணைவேந்தர்கள். அப்பதவிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளவர்களை தேர்வு செய்ய வேண்டும். யு.ஜி.சி., விதிமுறை இருந்தாலும், ஒவ்வொரு பல்கலையும் ஒவ்வொரு சட்டங்களை வகுத்துக்கொண்டுள்ளன. அதற்கு ஏற்ப துணைவேந்தர்களை தேர்வு செய்வது தற்போதும் தொடர்கின்றன.
மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் தேர்வு விவகாரத்தில், யு.ஜி.சி., விதிமுறை பின்பற்றப்பட்டதா என்பதை துணைவேந்தர் பேனலை முடிவு செய்த குழுவும், கவர்னரும் முன்கூட்டியே ஆய்வு செய்திருக்க வேண்டும். அவர்களுக்கு இதில் முக்கிய பொறுப்பு இருந்திருக்க வேண்டும், என்றார்.
Category: மாவட்ட செய்தி
0 comments