துபாயில் சாலை விபத்தை தடுக்க இப்தார் நேரத்தில் இலவச விருந்து!
துபாய், ஜூலை 5-
அரபு நாடுகளில் நோன்பிருக்கும் டிரைவர்கள், நோன்பை நிறைவு செய்யும் ‘இப்தார்’ நேரம் நெருங்கி விட்டால் ‘மஹ்ரிப்’ தொழுகையை தவற விட்டு விடுவோமோ.. என்ற பதற்றத்தில் தங்களது வாகனங்களை அசுர வேகத்தில் ஓட்டிச் செல்கின்றனர்.
இதே பாணியில் எதிரெதிர் பாதையில் வரும் இரு வாகனங்களும் ஒன்றையொன்று நெருங்கும்போது எதிர்பாராத விதமாக விபத்துகளும், அவை சார்ந்த உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இதனைக் கருதி, துபாயை சேர்ந்த அல் இஷான் என்ற தொண்டு நிறுவனம், அந்நாட்டின் பிரதான சாலை வழியாக வாகனங்களை ஓட்டிச் செல்லும் நோன்பாளி டிரைவர்களுக்கு இலவசமாக இப்தார் விருந்து அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான நோன்பாளிகள் பதற்றமில்லாமல் தங்கள் நோன்பினை நிறைவு செய்ய முடியும்.
இதன்மூலம் அனாவசிய சாலை விபத்துகளையும், அநியாய உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும் என்று இந்த அறக்கட்டளையின் ‘விபத்தில்லா ரமலான்’ பிரசார திட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் காலித் முஹம்மது பின் தமிம் தெரிவித்தார்.
இதே போன்று, அல் குபைபா, கோல்ட் சவ்க், அல் குசைஸ், புர்ஜுமான் ஆகிய பஸ் நிலையங்களிலும் துபாயின் மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் நோன்பாளிகளுக்கு இலவச இப்தார் விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ’உங்களுடன்’ என்ற திட்டத்தின் மூலம் வசதி குறைவாக உள்ள மக்களுக்கு ரமலானுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வழங்கும் வாகனங்களும் அவ்ட் மடினா, அல் குவாசிஸ், பழைய அல் குவோஸ் ஆகிய பகுதிகளில் சுற்றி வருகின்றன.
Category: துபாய்
0 comments