குழந்தைகளுக்கு டிவி வேண்டாம்: எச்சரிக்கும் புதிய சர்வே
பள்ளியிலிருந்து வந்தவுடன் குழந்தைகள் டிவிமுன் அமர்ந்துவிடுகிறார்கள். பலர் சாப்பிடுவதும் டிவி பார்த்துக்கொண்டுதான். ராத்திரி தூங்கச் செல்வதற்குச் சில நிமிடங்கள் முன்புவரை தொலைக்காட்சியைவிட்டு நகராத குழந்தைகள் உண்டு.
போதாக்குறைக்கு, பெரியவர்கள் பார்க்கிற சீரியல் போன்றவற்றையும் குழந்தைகள் அமர்ந்து பார்க்கின்றன. அவர்கள் ஏதாவது வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும், காதில் டிவி வசனம் விழுந்துகொண்டே இருக்கிறது.
இதெல்லாம் எந்த அளவு நல்லது? அல்லது கெட்டது? யாருக்கும் தெரியாது!
சமீபத்திய ஆய்வு ஒன்று இதுபற்றி ஆராய்ந்து சில முக்கியமான தீர்மானங்களை வெளியிட்டுள்ளது. அவை வாசிக்க வாசிக்க அதிர்ச்சி அளிக்கின்றன.
முதலில், குழந்தைகள் டிவியை நேரடியாகப் பார்த்தாலும் சரி, எங்கோ ஓடிக்கொண்டிருக்கும் டிவி அவர்கள் காதில் விழுந்தாலும் சரி, அவர்கள் செய்யும் வேலை உடனே பாதிக்கப்படுகிறது என்கிறது இந்த ஆய்வு. அதாவது, குழந்தை ஹோம் வொர்க் செய்யும்போது நீங்கள் டிவியில் செய்தி பார்த்தால், அது அந்தக் குழந்தையின் ஹோம் வொர்க் செய்யும் திறனைப் பாதிக்கிறது, குழந்தை அதிகம் தப்புச் செய்கிறது.
ஒருவேளை, குழந்தை விளையாடிக்கொண்டிருந்தாலும்கூட, டிவி அவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறதாம். விளையாட்டையும் கவனிக்காமல் டிவியையும் பார்க்காமல் அவர்கள் திணறிப்போகிறார்களாம்.
அப்படியானால், தொலைக்காட்சி பார்ப்பது முற்றிலும் தவறா?
கிட்டத்தட்ட அப்படிதான் சொல்கிறது அயோவா பல்கலைக்கழகம் நடத்தியுள்ள இந்த ஆய்வு. கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளைக் குழந்தைகள் பார்க்கலாம், மற்றபடி எல்லா நிகழ்ச்சிகளும் அவர்களுடைய சிந்திக்கும் திறனைக் கடுமையாகப் பாதிக்கின்றன என்கிறார்கள் இவர்கள்.
உதாரணமாக, ஒரு திரைப்படம் பார்க்கிறார்கள் என்றால், அதில் வரும் எல்லாக் காட்சிகளும் முழுமையாக அவர்கள் மனத்தில் பதிகின்றன. அதனால், கற்பனை செய்யும் திறன் குறைகிறது, சிந்திக்கும் வல்லமையை மெதுவாக இழக்கத் தொடங்குகிறார்கள். திரையில் காண்பிக்கப்படும் காட்சிகளைமட்டும் பார்த்து ரசிக்கும் மனோநிலை வந்துவிடுகிறது. இவை எல்லாம் அவர்களுடைய படிப்பை நேரடியாகப் பாதிக்கும்.
அதற்குப் பதிலாக, குழந்தைகளை நல்ல கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்க்க ஊக்குவிக்கலாம் என்று இந்த ஆய்வு பரிந்துரை செய்கிறது. ஒருவேளை மற்ற நிகழ்ச்சிகளைப் பார்த்தால், அளவோடு வைத்துக்கொள்ளவேண்டும். மற்ற நேரங்களில் அவர்களுடைய காதில்கூட இந்த நிகழ்ச்சிகள் விழாதபடி பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது. இந்த விஷயத்தில் குழந்தைகளுக்காகப் பெற்றோர் தியாகம் செய்யவேண்டியது மிகவும் அவசியம். அவர்கள் நிறைய தொலைக்காட்சியைப் பார்த்தால், குழந்தைகளுக்கும் அதே பழக்கம்தான் வரும்.
ஆகவே, உங்கள் குழந்தைகள் எவ்வளவு தொலைக்காட்சி பார்க்கிறார்கள், எந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள் என்று கவனிப்பது அவசியம். அதன் அடிப்படையில் வேண்டிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து அவர்கள் சரியான நிகழ்ச்சிகளைமட்டுமே பார்க்கிறார்கள் என்று உறுதிப்படுத்திக்கொள்வது இன்னும் அவசியம். இவையே இந்த ஆய்வின்மூலம் தெரியவந்துள்ள முக்கியமான அம்சங்கள்.
Category: துனுக்குகள்
0 comments