குவைத்தில் இருந்து பொம்மையில் மறைத்து 3 கிலோ தங்கம் கடத்தல் ஆந்திர சிறுவன் கைது!
ஆலந்தூர்,
குவைத்தில் இருந்து விளையாட்டு பொம்மைகளில் 3 கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்த ஆந்திராவைச் சேர்ந்த சிறுவனை அதிகாரிகள் கைது செய்தனர்.பொம்மைகளுடன் வந்த சிறுவன்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று காலை குவைத்தில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஆந்திர மாநிலம் கடப்பா ராஜம்பேட் பகுதியைச் சேர்ந்த பாஷா(வயது 17) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பவர் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு திரும்பி வந்தார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது எதுவும் இல்லை.
ஆனால் அவரது சூட்கேசில் நிறைய விளையாட்டு பொம்மைகள், குழந்தைகளுக்கான சாக்லெட்டுகள், பிஸ்கட்டுகள் இருந்தன. ஏன் இவ்வளவு பொம்மைகள் கொண்டு வந்தீர்கள்? என அதிகாரிகள் கேட்டனர்.3 கிலோ தங்கம் சிக்கியது
அதற்கு, ‘ஆந்திராவில் பொம்மை கடை வைக்க போகிறேன். அதற்காக குவைத்தில் இருந்து வாங்கி வந்தேன்’ என்றார். பொம்மைகளை அதிகாரிகள் எடுத்து பார்த்தனர். சந்தேகம் கொண்டு சோதனை செய்தபோது, அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பொம்மைகள், சாக்லெட்டுகளில் இருந்து 3 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.90 லட்சம் ஆகும்.
இதையடுத்து ஆந்திர மாநில சிறுவன் பாஷாவை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். சிறுவனை கடத்தலில் ஈடுபடுத்தியது யார்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதிர்ச்சி
சென்னை விமான நிலைய வரலாற்றில் கடத்தல் தொடர்பாக பலர் சிக்கி உள்ளனர். ஆனால் முதல் முறையாக சிறுவன் பிடிபட்டு உள்ளதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனின் தந்தையிடம் விசாரணை நடத்துவதற்காக சுங்க இலாகா அதிகாரிகள் ஆந்திராவிற்கு சென்று உள்ளனர்.
Category: மாநில செய்தி

0 comments