பெரம்பலூரில் ஜூலை 26, ஆகஸ்ட் 2 தேதிகளில் கல்விக்கடன் வழங்கும் முகாம்! வி.களத்தூர் மாணவ மாணவிகளுக்கு ஜூலை 26!
பெரம்பலூர், ஜூலை 20:
பெரம்பலூரில் வருகிற 26 மற்றும் ஆகஸ்டு 2 தேதிகளில் கல்விக்கடன் முகாம்கள் நடைபெறுகிறது. இது வரை 467 மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்காக ஜூலை 26, ஆகஸ்டு 2 ஆகிய தேதிகளில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கல்விக்கடன் வழங்கும் முகாம்கள் நடைபெறுகிறது. முகாமில் 21 வங்கிகளை சேர்ந்த 68 வங்கி கிளைகள் கலந்து கொள்கின்றன.
முகாமினையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட முன்னேற்பாடு கூட்டம் நேற்று கலெக்டர்அலுவலகத்தில் நடைபெற்றது. சப்.கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கல்விக்கடன் வழங்கும் முகாம் குறித்த விளம்பர பணிகள், வங்கியாளர்கள் தனித்தனியே கவுண்டர்கள் அமைப்பது, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நுழைவு வாயிலில் விவரங்கள் அளிப்பது, குடிநீர் ஏற்பாடு உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சப் கலெக்டர் மதுசூதனன்ரெட்டி பேசுகையில்,பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 26ம்தேதி பெரம்பலூர், வேப்பந்தட்டை வட்டாரங்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளும், ஆகஸ்டு 2ம்தேதி வேப்பூர், ஆலத்தூர் வட்டாரங்கள் மற்றும் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்விக்கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகள் மற் றும் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 10ம்வகுப்பு மற்றும் 12ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி முதல்வரின் சேர்க்கைக்கான சான்றிதழ்கள், பெற்றோரின் ஊதியச் சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்பஅட்டை, மருத்துவ கல்வி, பொறியியல் கல்விக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
முகாமிற்கான விண்ணப்பங்கள் அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற் றும் மாவட்ட ஊரக வளர் ச்சி முகமை ஆகிய இடங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும்
http://www.perambalur.nic.in/
என்ற இணையதள முகவரிகளில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த கல்விக்கடன் முகாமிற்கான விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்ட அலுவலகம், புதுவாழ்வுதிட்ட அலுவலகம், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சிமுகமை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செயல்பட்டு வரும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று வரை 467 மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றுள்ளனர். மேலும் விபரங்களுக்கு 9788532233என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றார்.
ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குநர் அய்யம் பெருமாள், முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகர், வங்கியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments