திருச்சி பஸ் நிலையத்தில் அரசு விரைவு பஸ்சை கடத்த முயற்சி! வாலிபர் கைது!
திருச்சி, ஜூலை 20:
திருச்சி பஸ் நிலையத்தில் அரசு விரைவு போக்குவரத்து பஸ்சை கடத்தி செல்ல முயன்ற வாலிபரை போலீ சார் கைது செய்தனர்.
நாகர்கோவிலில் இருந்து நேற்று முன்தினம் இரவு அரசு விரைவு போக்குவரத்து பஸ் ஒன்று புறப்பட்டு திருச்சி வந்தது. பஸ்சை நாமக்கல், ராசிபுரத்தை சேர்ந்த டிரைவர் செல்வம் (46) ஓட்டி வந்தார். கண்டக்டராக கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்த சண்முகசுந்தரம் இருந்தார்.
நேற்று அதிகாலை பஸ் திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். பஸ்சை டிரைவர் செல்வம் நிறுத்திவிட்டு டீ சாப்பிட சென்றார். கண்டக்டர் சண்முகசுந்தரம், வசூலான பணத்தை திருச்சி அலுவலகத்தில் கட்டுவதற்காக சென்றார்.
அப்போது, சண்முகசுந்தரத்திடம் வந்த ஒரு வாலிபர், இந்த பஸ் சென்னைக்கு செல்லுமா என கேட்டார். அதற்கு சண்முகசுந்தரம் போகாது என்றார். மீண்டும் அந்த வாலிபர் சென்னைக்கு எவ்வளவு கட்டணம் என கேட்டார். 240 ரூபாய் என சண்முகசுந்தரம் கூறியதை அடுத்து, என்னிடம் 40 ரூபாய் தான் உள்ளது, சென்னைக்கு அழைத்து செல்லுங்கள் என கூறினார். 40 ரூபாய்க்கு எப்படி அழைத்து செல்ல முடியும் என கேட்டுவிட்டு பணம் கட்டுவதற்காக சென்றார். இந்நிலையில் அந்த வாலிபர் திடீரென பஸ்சில் ஏறி பஸ்சை ஸ்டார்ட் செய்து ஓட்டி கொண்டு சென்றார். இதை பார்த்த டிரைவர் செல்வம், கூச்சல் போட்டு கொண்டே ஓடி சென்றார்.
பஸ்நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் மற்றும் டிரைவர்கள் பஸ்சை தஞ்சை பஸ் நிற்கும் பிளாட்பாரம் அருகே மடக்கி பிடித்தனர். தொடர்ந்து பஸ்சை ஓட்டி சென்ற வாலிபரை பிடித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிபள்ளத்தை சேர்ந்த செல்வகுமார் (26) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தது தெரியவந்தது. வழக்கு பதிந்த போலீசார் செல்வகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Category: மாநில செய்தி


0 comments