பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பயிர்க் கடன் முகாம்: 2 நாட்களில் ரூ. 2.18 கோடி கேட்டு 493 விண்ணப்பங்கள்!
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பயிர்க்கடன் வழங்கும் முகாமில் கடந்த 2 நாட்களில் ரூ. 2.18 கோடி பயிர்க் கடன் கேட்டு 493 விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் 21-ம் தேதி வரை பயிர்க்கடன் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, பூலாம்பாடியில் புதன்கிழமை நடைபெற்ற பயிர்க் கடன் வழங்கும் முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கூறியது: பயிர்க்கடன் வழங்கும் முகாம்களில் விவசாயிகள் பயிர்க்கடன் பெற தேவையான கணினி சிட்டா, அடங்கல் ஆகியவை முகாம் நடைபெறும் பகுதிகளிலேயே வருவாய்த் துறை அலுவலர்களால் வழங்கப்படும். மேலும், விவசாயிகள் வசிக்கும் பகுதிக்குள்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடன் நிலுவை இல்லையெனில், அதற்கான கடன் இல்லா சான்று வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்ற முகாம்களில் சுமார் ரூ. 2.18 கோடி பயிர்க் கடன் கேட்டு 493 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
3-ம் தேதி எளம்பலூர், மேலப்புலியூர் (கி), பெருமத்தூர் (வ), பென்னகோணம் (தெ), பரவாய் (மே), தொண்டபாடி, செ.மாவிலங்கை, காரை (மே), பூலாம்பாடி (மே), நூத்தப்பூர் (வ), அனுக்கூர் ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற உள்ளது. 4-ம் தேதி செங்குணம், மேலப்புலியூர் (மே), பெருமத்தூர் (தெ), ஆண்டிக்குரும்பலூர், வடக்கலூர், பரவாய் (கி), ஆதனூர் (வ), சிறுவயலூர், தெரணி, வெங்கனூர், பில்லங்குளம், பிரம்மதேசம் ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.
7-ம் தேதி துறைமங்கலம், லாடபுரம் (மே), சிறுமத்தூர், ஒகளுர் (மே), எஸ்.ஆடுதுறை, புதுவேட்டக்குடி, ஆதனூர் (தெ), நக்கசேலம், புது அம்மாபாளையம், அயனாபுரம், தழுதாழை, கை.களத்தூர் (மே), மேட்டுப்பாளையம் (தெ) ஆகிய கிராமங்களிலும் பயிர்க் கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளன. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.
Category: மாவட்ட செய்தி
0 comments