சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கான ஊடகத்துறை!
“மனதுக்கு ஆர்வத்தை தூண்டி மகிழ்ச்சியையும், பணி திருப்தியையும் தருவது பத்திரிகையாளர் பணி. மேலும், தனி அந்தஸ்து கொண்ட பணியாகவும் இது விளங்குகிறது. சமூகத்தில் நிகழும் சம்பவங்களை சேகரித்து, அதை மக்களிடம் பரப்பும் பெரும் பணியை பத்திரிகையாளர்கள் செய்கிறார்கள்.”
* தனிப்பட்ட பண்புகள்:
ஒருவர் நல்ல பத்திரிகையாளராக இருக்க வேண்டுமெனில் அவருக்கு, ஆர்வம், நெகிழ்வுத்தன்மை, நல்ல ஆளுமை, தெளிவான சிந்தனை, செய்தித்தாள், வார இதழ் போன்றவற்றில் நல்ல மொழியில் எழுதும் திறன் இருக்க வேண்டும். பத்திரிகை துறையில் இருக்கும் பல பதவிகளுக்கு ஏற்றவாறு பலவித தகுதிகள் தேவைப்படுகின்றன. ஒரு பத்திரிகை அலுவலகத்தில் முதன்மை ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், பணியாளர் போன்ற பல பொறுப்புகள் உள்ளன. அரசியல், சர்வதேச செய்திகள், கல்வி, பிராந்திய செய்திகள், குற்றம், விளையாட்டு, சினிமா, வணிகம், சட்டம், தொழில் போன்ற பல பிரிவுகள் உள்ளன.
* பணி பொறுப்பு:
மக்களிடம் பேசி அவர்களிடம் பேட்டி எடுப்பதன் மூலமும், சம்பவங்களை தொகுப்பதன் மூலமும் ஒரு பத்திரிகையாளர் செய்திகளையும், தகவல்களையும் பெற வேண்டும். ஒரு கட்டுரைக்கான பின்னணி தகவலை அமைப்பதற்கு, அது சம்பந்தமான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். ஒரு செய்தி அல்லது கட்டுரையை வெளியிடும் முன்பாக அதை மதிப்பிட்டு, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
* செய்திக்குழு:
ஒட்டுமொத்த செய்திக்குழுவின் தலைவர் முதன்மை செய்தி ஆசிரியர். அனைத்து செய்திகளையும் ஆராய்ந்து, பிரசுரிக்க வேண்டிய செய்திகளை இவர் முடிவு செய்வார். முதன்மை செய்தி ஆசிரியர் என்பவர் பட்டதாரியாக இருப்பது மட்டுமின்றி, அனுபவம் மற்றும் ஆர்வத்தின் மூலமாக நன்கு படித்த நபராகவும், நாட்டில் நடந்த மற்றும் நடக்கும் அரசியல் சம்பவங்கள், முக்கிய நிகழ்வுகள் பற்றி நுணுக்கமான மற்றும் தெளிவான அறிவு கொண்டவராக இருக்க வேண்டும். முதன்மை ஆசிரியரின் வலது கையாக இருப்பவர் செய்தி ஆசிரியர்.
அடுத்த நாள் செய்தித்தாள் பதிப்பில் வரக்கூடிய செய்திகள் எவை என்பதை சேகரித்து முடிவு செய்வது இவரின் முக்கிய பணி. பல இடங்களில் இருந்து, செய்தி திரட்டி தருபவர்களின் நெட்வொர்க் மற்றும் அவர்களின் தலைமையாகவும் இவர் செயல்படுகிறார். செய்தி ஆசிரியருக்கு அடுத்தபடியாக துணை ஆசிரியர்கள், முதன்மை உதவி ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் ஆகியோர் செய்திக்குழுவில் இருப்பார்கள். செய்திகளை கோர்வையாக மாற்றுவது, தேவையற்ற வார்த்தைகள் வாசகங்களை எடிட் செய்வது, திருத்துவது இவர்களின் பணியாகும்.
* நிருபர்கள்:
ஒரு செய்தித்தாளின் கண்கள் மற்றும் காதுகளாக நிருபர்கள் கருதப்படுகிறார்கள். செய்திகளை மோப்பம் பிடிக்கும் திறமை அவரிடம் இருக்க வேண்டும். பிறருடன் எளிதில் நெருங்கி பழகும் தன்மை உள்ளவராகவும், பல நிலைகளில் இருந்து செய்திகளை பெரும் வகையில் ஆட்கள் தொடர்புடையவராகவும், இருக்க வேண்டும். நன்றாக எழுதும் திறமை அவசியம் வேண்டும். ஒரு நிருபர் தன்னை சுய ஒழுக்கம் உள்ளவராகவும், சுய கட்டுப்பாடு உள்ளவராகவும் மாற்றிக் கொள்ள வேண்டும். அறிவுத்திறன், பகுப்பாய்வு திறன், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அமைதியான மனநிலை, போன்றவை ஒரு நல்ல நிருபருக்கு தேவையான குணாதிசயங்கள் ஆகும்.
சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காக நியமிக்கப்பட்ட நிருபர்கள் சிறப்பு செய்தி வழங்குனர்கள் ( ஸ்பெஷல் கரஸ்பான்டன்ட்) எனப்படுகின்றனர். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முக்கிய செய்திகளை வழங்குவது இவர்களின் பணி. நிருபராக இருந்து போதிய அனுபவம் பெற்றவர்களே, சிறப்பு செய்தி வழங்குனர்களாக ஆக முடியும்.
* வானொலி மற்றும் தொலைக்காட்சி துறை:
மீடியாதுறையில் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியவை முக்கிய பங்கு வகிப்பதுடன், ஏராளமான மீடியா சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பை தருகிறது. சாத்தியப்பட்ட இடத்திற்குள் நுட்பத்தை கொண்டு வருவதே இத்துறைக்கு தேவைப்படும் முக்கிய திறமையாகும். இத்துறையில் நிருபராக இருப்பவருக்கு செய்தி எழுதுதல் மற்றும் செய்தியை கேமராவில் கொண்ட வருதல் உள்ளிட்ட பணிகள் தெரிந்திருப்பது அவசியம்.
* படிப்பு மற்றும் பயிற்சிகள்:
நீங்கள் ஒரு சிறந்த ஊடகவியலாளர் ஆக விரும்பினால், அதற்கு முறையான பயிற்சி பெற வேண்டும். தற்போது அதிகளவிலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், ஊடகத்துறை சம்பந்தமான பயிற்சிகளை அளிக்கின்றன. இந்த துறையை பொறுத்த வரை ஒருவர் என்னதான் பட்டப்படிப்பு படித்து பயிற்சி எடுத்தாலும், சுவாரஸ்யமாகவும், சிறப்பாகவும் செய்திகளை எழுதும் மற்றும் உருவாக்கும் திறமையை பெற்றிருக்க வேண்டும். பள்ளிப்படிப்பை முடித்தவுடன் இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் அதன் பிறகான முதுநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை டிப்ளமோ படிப்புகள் போன்றவை பல கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
* படிப்பின் வகைகள்:
ஜர்னலிசம்/ மாஸ் கம்யூனிகேஷன் துறையில் இளநிலை பட்டப்படிப்பு, பி.ஏ (ஹானர்ஸ்) ஜர்னலிசம், 3 வருட பி.ஏ. ( ஹானர்ஸ்) இந்தி பத்ரகரிதா, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் ஜர்னலிச சான்றிதழ் படிப்புகள்( பள்ளி படிப்பிற்கு பிறகு), எம்.ஏ ஜர்னலிசம்/ மாஸ் கம்யூனிகேஷன். இந்த படிப்புகளை பல புகழ்பெற்ற பல்கலைகழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.
* சம்பளம்:
ஊடகத்துறையில் பொதுவாக நிறுவனத்திற்கு ஏற்றாற்போல சம்பள விகிதம் மாறுபடுகிறது. நகரங்களில் பணிபுரியும் பயிற்சி காலத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் 6 மாதங்கள் முடிந்த பிறகு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை பெறுகிறார்கள். பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு துணை ஆசிரியர் மற்றும் சீனியர் நிருபர் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறுகிறார்கள். தேசிய நாளிதழ்களில் பணிபுரியும் செய்தி ஆசிரியர்கள் ரூ.1. லட்சம் முதல் ஊதியமாக பெறுகிறார்கள்.
Category: மாணவர் பகுதி
0 comments