.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு ; மாணவர்கள் அவதி!

Unknown | 9:00 PM | 0 comments



பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டதால் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த மாணவர்களும், பெற்றோரும் புகார் தெரிவித்தனர்.

இவர்களில் பலர், கலந்தாய்வுக்கு ஒரு நாள் முன்னதாகவே அதாவது வியாழக்கிழமையே சென்னை வந்துள்ளனர்.

சிலர் ரயில் டிக்கெட் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்குப் பிறகு சென்னை வந்துள்ளனர். இந்த நிலையில் கலந்தாய்வு ஒத்திவைப்பு செய்தி இவர்களை மிகுந்த அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பொதுப் பிரிவு கலந்தாய்வு ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 27-ஆம் தேதி தொடங்க இருந்தது.

இதற்கிடையே பொறியியல் மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த சில தனியார் கல்லூரிகளும், ஒடிஸா தொழில்நுட்ப கல்லூரிகள் சங்கமும் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனு வியாழக்கிழமை (ஜூன் 26) விசாரணைக்கு வந்தது.

அப்போது, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தங்களிடம் நிலுவையில் உள்ள கல்லூரிகளின் விண்ணப்பங்களை பரிசீலிக்க ஒரு வாரம் அவகாசம் தேவை என தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை 7 நாள்களுக்குள்ளாக பரிசீலித்து ஏஐசிடிஇ முடிவு எடுக்க வேண்டும் என வியாழக்கிழமை (ஜூன் 27) உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தொடங்கவிருந்த பொதுப் பிரிவு கலந்தாய்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை மாலை திடீரென அறிவித்தது.

இந்த அறிவிப்புக்குப் பின்னர், கலந்தாய்வுக்கு முதல் மூன்று நாள்களுக்கு அழைக்கப்பட்டிருந்த மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்ட தகவலை பல்கலைக்கழகம் தெரிவித்தது.

இருந்தபோதும் திருநெல்வேலி, கோவை, சேலம் போன்ற தொலை தூர மாவட்டங்களைச் சேர்ந்த பலர் கலந்தாய்வு தொடங்குவதற்கு முந்தைய தினமே சென்னை வந்து சேர்ந்துள்ளனர். சிலர் வியாழக்கிழமை மதியமே ரயில் மற்றும் பஸ்கள் மூலம் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு சென்னை வந்து சேர்ந்தவர்களில் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்ட செய்தி அறியாதவர்களும், அறிந்தவர்கள் சிலரும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் வரத் தொடங்கினர்.

இவ்வாறு வருபவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் ஊருக்கு திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்துவதற்காக, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பல்கலைக்கழக நுழைவுவாயிலில் தயார் நிலையில் நின்றிருந்தனர்.

காலை முதல் மதியம் 2 மணி வரை 300-க்கும் அதிகமானோர் பல்கலைக்கழகத்துக்கு வந்தனர். இவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தியபோதும், பலர் அதிருப்தியை தெரிவித்து திரும்பிச் சென்றனர்.

இவர்களில் 199.25 கட்- ஆப் மதிப்பெண் பெற்றுள்ள மாணவர் கிருஷ்ணன், சேலத்திலிருந்து பெற்றோருடன் வெள்ளிக்கிழமை அதிகாலை ரயில் மூலம் சென்னை வந்து சேர்ந்துள்ளார். ரயில் பயணத்தில் இருந்ததால், நள்ளிரவு வரை பல்கலைக்கழகம் அனுப்பிய எஸ்.எம்.எஸ். வந்து சேரவில்லை. அரக்கோணம் வந்தபோதுதான் எஸ்.எம்.எஸ். வந்தது. இப்போது கலந்தாய்வு நடைபெறும் வளாகத்தை பார்த்துவிட்டு செல்வதற்காக வந்தோம். ஊருக்கு திரும்பிச் செல்வதற்கு ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டோம். இருந்தபோதும், தங்கும் விடுதி கட்டணம் உள்பட ரூ. 2 ஆயிரம் அளவுக்கு செய்துள்ள செலவு வீணாகியுள்ளது என கிருஷ்ணனின் பெற்றோர் தெரிவித்தனர்.

இவரைப் போல், ஜூன் 28-ஆம் தேதி கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய 198.25 கட்-ஆஃப் பெற்றுள்ள பொள்ளாச்சியைச் சேர்ந்த சாம்நாஸ் என்ற மாணவர் தனது தந்தையுடன் வியாழக்கிழமையே சென்னைக்கு வந்துள்ளார்.

கலந்தாய்வு ஒத்திவைப்பு செய்தி இவருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவரும் அவருடைய தந்தையும் கூறுகையில், முன்னெச்சரிக்கை காரணமாக இரு தினங்களுக்கு முன்னரே சென்னைக்கு வந்திருந்தோம். ஆனால், கலந்தாய்வை திடீரென ஒத்திவைத்திருப்பது மிகுந்த பொருள் செலவையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியிருப்பதோடு, மீண்டும் சென்னை வருவதற்கு ரயில் டிக்கெட் கிடைக்குமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், கலந்தாய்வை ஒத்தி வைக்கும் முடிவை பல்கலைக்கழகம் முன்னரே எடுத்திருக்க வேண்டும். தீர்ப்பு வரும் வரை காத்திருந்து, கடைசி நேரத்தில் இதுபோன்று ஒத்திவைப்பது, எங்களைப் போன்ற ஏழைகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. இனி இதுபோன்ற தவறை பல்கலைக்கழகம் செய்யக் கூடாது என்றனர்.

இவர்களைப் போல் மதுரையிலிருந்து நாகர்ஜுன் (199.25), திருநெல்வேலியிருந்து அர்ச்சனா (199.25), மேட்டுப்பாளையத்திலிருந்து தனுஷ்பத்மன் (199.25) உள்ளிட்ட பலர் காலை 7.30 மணிக்கே அண்ணா பல்கலைக்கழகம் வந்து செய்வதறியாது நின்றிருந்தனர்.

பஸ் கட்டணச் சலுகை மீண்டும் கிடைக்குமா?

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க வெளியூர்களிலிருந்து வருபவர்களுக்கு இரு வழி பஸ் பயண கட்டணச் சலுகை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்ட தகவல் அறியாமல் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக சலுகை பஸ் கட்டணத்தில் சென்னைக்கு வந்த வெளியூர் மாணவர்களுக்கு மீண்டும் கட்டணச் சலுகை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெளியூர்களிலிருந்து வெள்ளிக்கிழமை காலை வந்த பலர் இந்த கேள்வியை எழுப்பினர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1