மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 4-ம் இடம்
12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 92.15% தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் மாவட்ட அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை பாராட்டி பரிசுகள் வழங்கி அவர் மேலும் கூறியது:
12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 3,693 மாணவர்களும், 3,877 மாணவிகளும் என மொத்தம் 7,548 பேர் தேர்வு எழுதினர். இதில் 3,533 மாணவர்களும், 3,715 மாணவிகளும் என மொத்தம் 7,248 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.59% இருந்த தேர்ச்சி விகிதம், நிகழாண்டு 96.03% உயர்ந்துள்ளது.
மாவட்ட அளவில் 1,187 மதிப்பெண்கள் பெற்று ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜி. கவின்ராஜ் மற்றும் ஈடன் காடன் மேல்நிலைப் பள்ளி மாணவன் ஏ. ஆனந்த் ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கே. நவநீதன் 1,184 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், ஆர். குரு 1,183 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 92.15 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் (கடந்த ஆண்டு 81.63 சதவீதமாகும்).
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். (கடந்த ஆண்டு 87.50 சதமாகும்). அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 97.65% தேர்ச்சி பெற்றுள்ளனர். (கடந்த ஆண்டு 97.15 சதமாகும்).
மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். (கடந்த ஆண்டு 98.43 சதமாகும்). சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 99.23% தேர்ச்சி பெற்றுள்ளனர். (கடந்த ஆண்டு 99.35 சதமாகும்).
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை தமிழகத்தின் சிறந்த மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்பட்ட சூப்பர் - 30 பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 30 மாணவ, மாணவிகளும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில், 17 மாணவ, மாணவிகள் 1,000-த்துக்கு மேற்பட்ட மதிப்பெண்களையும், 10 மாணவ, மாணவிகள் 900-த்துக்கு மேற்பட்ட மதிப்பெண்களையும், 2 மாணவ, மாணவிகள் 800-க்கு மேற்பட்ட மதிப்பெண்களையும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தீவிர முயற்சியால், மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 4-ம் இடம் பெற்றுள்ளது என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தா. மலையாளம் மற்றும் தனியார், அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் பங்கேற்றனர்.
Category: உயர் கல்வி
0 comments