ஆதார் அட்டைக்கு பதிய அழைப்பு!!
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டைக்கு பதிவு செய்ய அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் நகராட்சி மற்றும் ஆலத்தூர் வட்டத்திற்குள்பட்ட பொதுமக்கள் தங்களது பதிவை பெரம்பலூர் வட்ட அலுவலத்தில் மேற்கொள்ளலாம். பதிவு செய்ய வருவோர் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்பட்ட ஒப்புதல் சான்று அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் வர வேண்டும்.
இதுவரை பதிவு மேற்கொள்ளாதவர்கள், தேசிய அடையாள அட்டை பெற புகைப்படம், கைரேகை, விழித்திரை ஆகியவற்றுடன் தங்களது விவரக் குறிப்பை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்றுக்கொண்டு, வட்ட அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பதியலாம்.
புதிதாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம் தாக்கல் செய்த நபர்களும், ஏற்கெனவே ஆதார் அட்டை எடுக்க பதிவு செய்தவர்களில், தொழில்நுட்பக் காரணங்களால் பதிவு தள்ளுபடி செய்யப்பட்டவர்கள், அதுகுறித்த விவரத்தை சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர்களிடம் பெற்றுக் கொண்டு பதிவு செய்யலாம்.
2011ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பதிவு செய்யாதவர்கள் மற்றும் புதிதாக குடிபெயர்ந்தோர் ஆதார் அட்டை எடுக்க புதிய விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளரிடம் சமர்ப்பித்து, கணினியில் பதிவுகள் ஏற்படுத்திக்கொண்ட பின் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
சிறப்பு முகாம்கள் விரைவில் நிறைவடைய உள்ளதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Category: மாவட்ட செய்தி
0 comments