சென்னை விமான நிலையத்தில் கடும் பனிப்பொழிவு! விமானங்கள் தாமதம்!
சென்னை, பிப். 5:
சென்னை மற்றும் புறநகரில் சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. நேற்று காலை 7.40 மணி வரை கடுமையான மூடுபனி நிலவியது. அந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்துக்கு பெங்களூர், கொச்சி, ஐதராபாத் ஆகிய இடங்களில் இருந்து 3 விமானங்கள் வந்தன. மூடுபனி காரணமாக, விமானிக்கு ஓடுபாதை தெரியவில்லை.
இதையடுத்து அந்த 3 விமானங்களும் 15 நிமிடம் வானில் வட்டமடித்து கொண்டிருந்தன. மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பலாமா என விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் ஆலோசித்தனர். காலை 7.45 மணிக்கு மூடுபனி சிறிது சிறிதாக விலகியது. இதையடுத்து வானிலை சீரடைந்ததால் 3 விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கியது.
இதேபோல், சென்னையில் இருந்து புறப்பட இருந்த ஒரு சில விமானங்களும் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
விமான நிலைய ஓடுபாதை அருகில் உள்ள டாக்சிவே பராமரிப்பு பணிகள் நேற்று காலையில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் தரையிறங்கும் அனைத்து விமானங்களும் ஓடுபாதையிலேயே ஓடி நின்று விடுகின்றன. டாக்சிவேக்கு வரமுடியவில்லை. இதனால் அடுத்தடுத்து பின்னால் வரும் விமானத்துக்கு தரை இறங்க அனுமதி கொடுக்க முடியவில்லை. 30 நிமிடம் வரை காலதாமதம் ஏற்பட்டது. இதனல், பயணிகள் அவதியடைந்தனர்.
Category: மாநில செய்தி
0 comments