வரும் மக்களவைத் தேர்தலில் வாக்கு ஒப்புகைச் சீட்டு நடைமுறை அறிமுகம்!
யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிவிக்கும் ஒப்புகைச் சீட்டு நடைமுறையை வரும் மக்களவைத் தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.
தென் மண்டலம் மற்றும் மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான தேர்தல் முன்னேற்பாடு பயிற்சி, மதுரை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வருகிறது.
நிறைவு நாளான வெள்ளிக்கிழமை, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து பயிற்சி அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும்போது சம்பந்தப்பட்ட வாக்காளரின் வரிசை எண், பெயர், வாக்களித்த வேட்பாளருக்குரிய சின்னம் ஆகியவை ஒப்புகைச் சீட்டில் அச்சாகும். இருப்பினும் அந்த ஒப்புகைச் சீட்டு வாக்காளருக்கு வழங்கப்பட மாட்டாது. மின்னணு இயந்திரத்தின் கண்ணாடி பகுதி வழியாகதான் இதனைக் காண முடியும்.
இந்த ஒப்புகைச் சீட்டு நடைமுறையை வரும் மக்களவைத் தேர்தலில் அறிமுகம் செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும் அனைத்து தொகுதிகளிலும் அறிமுகம் செய்ய வாய்ப்பு இருக்காது.
பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் வாக்களிக்க தடுக்கப்பட்ட வாக்குச்சாவடிகள், யாரேனும் ஒரு வேட்பாளர் 75 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்றிருந்தால் அத்தகைய வாக்குச்சாவடிகள், 50 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குப் பதிவாகியுள்ள வாக்குச்சாவடிகள் என்ற அடிப்படையில் பதற்றமான வாக்குச் சாவடிகள் கணக்கெடுக்கப்படுகிறது.
எத்தனை வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும்.
வெப் கேமிராவில் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுவதுடன், மத்திய அரசு ஊழியர்கள் “மைக்ரோ அப்சர்வர்களாக’ நியமிக்கப்படுவர். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்துவதா அல்லது இரண்டு கட்டங்களாக நடத்துவதா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
வாக்காளர்கள் வாக்குகளை விற்கக்கூடாது. வாக்களிக்கப் பணம் கொடுப்பது குறித்து ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
Category: மாநில செய்தி
0 comments