பெரம்பலூர் மாவட்டத்தில் 91 ஊராட்சிகளில் விளையாட்டு போட்டி: 10நாட்கள் நடக்கிறது!
பெரம்பலூர், பிப்.12:
பெரம்பலூர் மாவட்டத்தில் 91ஊராட்சிகளில் நாளை முதல் 23ம்தேதிவரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என கலெக்டர் தரேஸ்அஹமது தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது,
மத்திய அரசால் பைக்கா விளையாட்டுப் போட்டி நடத்தப்படுவதுபோல, மாநில அரசால் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல கிராம மக்களிடையே விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்த, கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் நடத்தத்திட்டமிட்டு, ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா ரூ20ஆயிரத்தை தமிழகஅரசு ஒதுக்கியுள்ளது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121ஊராட்சிகளில் மக்கள்தொகை அதிகமுள்ளவை என்ற அடிப்படையில் லாடபுரம், எளம்பலூர், எசனை, கல்பாடி, அம்மாபாளையம், அன்னமங்கலம், வி.களத்தூர், தொண்டமாந்துறை, தேவையூர், கை.களத்தூர், நூத்தப்பூர், எறையூர், பாடாலூர், செட்டிகுளம், நக்கச்சேலம், நாரணமங்கலம், காரை, டி.களத்தூர், இரூர், சிறுவயலூர், எலந்தலப்பட்டி, கீழமாத்தூர், கீழப்புலியூர், ஓலைப்பாடி, துங்கபுரம், சிறுமத்தூர், பேரளி, கீழப்பெரம்பலூர், அத்தியூர், எழுமூர்ஆகிய 30ஊராட்சிகளில் ஜனவரி 2ம்தேதி தொடங்கி, 13ம்தேதிவரை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
30வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய 100மீ, 200மீ, 400மீ ஓட்டம், நீளம்தாண்டுதல், குண்டுஎறிதல், வட்டுஎறிதல் உள்ளிட்டவை ஆண், பெண் இருபால ருக்குமான தடகளப் போட்டிகள், வாலிபால், கபாடி, புட்பால் உள்ளிட்ட குழுப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதேபோல தற்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் எஞ்சியுள்ள 91 ஊராட்சிகளில் கிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகளை நாளை (13ம்தேதி) தொடங்கி வரும் 23ம்தேதி வரையென பத்துநாட்களுக்கு நடைபெறவுள்ளது. போட்டிகளில் பங்கேற்போரின் தேர்தல் அடையாளஅட்டை, குடும்பஅட்டை அடிப்படையில் பெயர்கள் பதிவு செய்யப்படுகிறது. ஊராட்சியிலுள்ள அனைத்து தரப்பினர், சுயஉதவிக் குழுவினர், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் இப்போட்டிகளில் முழுமையாக பங்கேற்கலாம். ஊராட்சிப் பணியாளர்கள் இப்போட்டியில் பங்கேற்கக் கூடாது. கிராமத்திலுள்ள பள்ளி விளையாட்டு மைதானம், சமுதாயக்கூட வளாகம், பொதுத்திடல் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெறும். போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் ஊராட்சி அலுவலகத்தில் பெயர்களை 13,14,15 ஆகிய 3நாட்களுக்குள் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி
0 comments