ஏன் அடிக்கடி பணி மாறிக்கொண்டே இருக்கிறீர்கள்?
நீங்கள் ஒரு பணியிலிருந்து மற்றொரு பணிக்கு மாறும்போது அல்லது அடிக்கடி பணி மாறுபவராக இருந்தாலோ, நேர்முகத் தேர்வில், உங்களிடம் சில தவிர்க்க முடியாத கேள்விகள் கேட்கப்படும்.
* ஏன் நீங்கள் தற்போதைய பணியிலிருந்து விலக நினைக்கிறீர்கள்?
* நீங்கள் அடிக்கடி பணி மாறுகிறீர்கள். எனவே, உங்களை நாங்கள் பணிக்கு சேர்த்தாலும், எங்கள் நிறுவனத்திலிருந்தும் நீங்கள் சில நாட்களில் சென்றுவிட மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?
இத்தகைய கேள்விகள் கேட்கப்பட்டால், நீங்கள் நீண்டநேரம் என்ன சொல்வதென்று யோசித்துக் கொண்டே அமைதியாக இருக்கக்கூடாது. விரைவில் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.
இதுபோன்ற கேள்விகளை கேட்பதன் மூலம், நீங்கள் அடிக்கடி பணி மாறுவதற்கான தவிர்க்க முடியாத காரணங்கள் எவை என்று அறிய விரும்புவார்கள். மேலும், தற்போது நீங்கள் பணிபுரியும் இடத்திலிருந்து மாறுவதற்கும் என்ன காரணம் என்பதை ஆராய விரும்புவார்கள்.
எப்போதுமே, நேர்மறை சிந்தனையுடன் கேள்விகளை அணுக வேண்டும். எந்த காரணம் கொண்டும், முன்பு பணிபுரிந்த நிறுவனங்களில் நீங்கள் துன்பமாக நினைத்த விஷயங்களை சொல்லக்கூடாது. உதாரணமாக,
* நான் இரவு ஷிப்ட் செல்ல வேண்டியிருந்தது
* நீண்டதூரம் நெரிசலில் பயணம் செய்து அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது
* அலுவலக நிர்வாகிகளால் முறையான மரியாதை தரப்படாமை
உள்ளிட்ட காரணங்களை எந்தக் காரணம் கொண்டும் சொல்லக்கூடாது. உங்களின் பழைய நிறுவனத்தைப் பற்றிய தவறான அபிப்ராயத்தை நேர்முகத் தேர்வின்போது சிறிதும் வெளிப்படுத்தக்கூடாது. ஏனெனில், அதை அவர்கள் கொஞ்சமும் ரசிக்க மாட்டார்கள். பிற்காலத்தில் நீங்கள் அவர்களைப் பற்றியும் அப்படித்தான் சொல்வீர்கள் என்று அவர்கள் நினைப்பார்கள்.
பணி மாறுவதற்கு நீங்கள் சொல்லக்கூடியவை
* பணிநிலை உயர்வு
* புதிய புதிய சவால்களை சந்திக்க விரும்புதல் மற்றும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆவல்
* வாழ்க்கைத் தரம் உயர்வு
* என்னுடைய திறமைகளை பழைய நிறுவனத்தில் முழுமையாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
மேற்கூறிய காரணங்கள் தவிர, நீங்கள் வேறுசில விஷயங்களையும் கூறலாம். கல்வித் தகுதிக்கும், அனுபவத்திற்கும் ஏற்ற சம்பளமும், பணித் தகுதியும் கிடைக்கவில்லை என்பதை காரணமாக கூறலாம்.
மேலும், நீங்கள் தனியாக தங்கியிருப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்து, தற்போது நேர்முகத் தேர்வை நடத்தும் நிறுவனம் தங்குமிட வசதியை வழங்கினால் அல்லது அதற்கான தொகை வழங்கும் விதிமுறையைக் கொண்டிருந்தால், அதைப் பற்றி நீங்கள் குறிப்பிடலாம்.
தற்போது நேர்முகத் தேர்வு நடத்தும் நிறுவனத்தில் பணி வாய்ப்பு கிடைத்தால், அங்கிருந்து எளிதில் பணி மாற மாட்டேன் என்பதை அவர்கள் திருப்திபடும் விதத்தில் கூற, கீழ்கண்ட விளக்கத்தைப் பயன்படுத்தலாம்.
"இந்த நிறுவனம் ஒரு புகழ்பெற்ற, திறமையை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கும் நிறுவனம். மேலும், பணி சவால்களும் மற்றும் எனது திறமையையும், அறிவையும் வளர்த்துக் கொள்வதற்கான விரிவான களமும் இங்குண்டு. எனவே, நான் பணி மாறுவதற்கான வாய்ப்புகள் இங்கே இருக்காது என்பது எனது எண்ணம்" என்பதாக உங்களின் பதில் அமைய வேண்டும்.
Category: வேலைவாய்ப்பு
0 comments