திருமாந்துறை டோல்கேட்ஊழியர்கள் திடீர் "ஸ்டிரைக்'! கடும் போக்குவரத்து நெருக்கடி!
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே திருமாந்துறையில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வரிவசூல் மையம் உள்ளது. இங்கு வரிவசூல் செய்யும் டோல் கலெக்டர்களாக, 48 பேர் பணியாற்றி வருகின்றனர். திருமாந்துறை டோல்கேட்டில் வரிவசூல் செய்யும் உரிமைக்காக, 2014 முதல் புதிய நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் புதிய விதிகளை அமல்படுத்தியதால், கடும் அதிருப்தியடைந்த ஊழியர்கள் நேற்று காலை, 6 மணி முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதனால் நேற்று காலை, 6 மணி முதல், 7.30 மணி வரை, வாகனங்கள் வரி வசூலிக்கப்படாமல் இலவசமாக சென்று வந்தன. அதன் பின் புதிய நிர்வாகத்தின் உதவி மேற்பார்வையாளர்கள் இரண்டு வழிகளில் மட்டும் அமர்ந்து, வரிவசூல் செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.வரிவசூல் செய்யும் ஊழியர்கள் உள்ளிட்ட, 48 பேர், தங்களை பணி நிரந்தரம் செய்தல், பணி பாதுகாப்பு, போதிய சில்லறை வழங்குதல், போதிய உணவு இடைவேளை, வரிவசூல் செய்யுமிடத்தில் மாஸ்க், மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்."டோல்' மேலாளர் அக்ரம்கான் மற்றும் அலுவலர்கள் கிஷோர், பஹீம் உள்ளிட்டோர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமாதானமடைந்த ஊழியர்கள், காலை, 11 மணிக்கு வரிவசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஊழியர்களின் திடீர் ஸ்டிரைக்கால், திருமாந்துறை லோல்கேட்டில் வரி வசூல் பாதிக்கப்பட்டது
Category: மாவட்ட செய்தி
0 comments