சென்னை விமான நிலையத்தில் 12வது முறையாக கண்ணாடி உடைந்தது!
சென்னை: சென்னை விமான நிலையத்தில், நேற்று, 12வது முறையாக கண்ணாடி நொறுங்கி விழுந்து, விபத்து ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில், புதிய பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்கள், 2,015 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. மே, 12ம் தேதி, புதிய உள்நாட்டு விமான முனையத்தில், மேற்கூரை தகடுகள் விழுந்து நொறுங்கின. இதைத் தொடர்ந்து, புதிய பன்னாட்டு மற்றும் பழைய பன்னாட்டு விமான முனையங்களில், மேற்கூரை சரிந்து விபத்துக்கள் ஏற்பட்டன. நவ., 3ம் தேதி, இரவு, 7:30 மணிக்கு, புதிய பன்னாட்டு முனையத்தில், ஒன்பதாவது முறையாக, அலங்கார கண்ணாடி சரிந்து விழுந்து, விபத்து ஏற்பட்டது. நவ.,15 அதிகாலை, 2:00 மணிக்கு, புதிய உள்நாட்டு முனையம், புறப்பாடு பகுதி, இரண்டாவது நுழைவு வாயில் கண்ணாடிக் கதவு (7 அடி நீளம்; 3 அடி அகலம்) நொறுங்கி விபத்து ஏற்பட்டது. நவ., 18ம் தேதி, உள்நாட்டு முனையம், வருகை பகுதி, வி.ஐ.பி.,க்கள் பயன்படுத்தும், மூன்றாம் நுழைவு வாயிலில், 10 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட கண்ணாடி கதவு, நொறுங்கி விழுந்தது. நேற்று, காலை, 9:20 மணிக்கு, 12வது முறையாக, உள்நாட்டு முனையத்தில் ஆறடி அகலம், ஆறடி நீளம் கொண்ட கண்ணாடி, 20 அடி உயரத்தில் இருந்து, பயங்கர சத்தத்துடன் பெயர்ந்து விழுந்தது. கண்ணாடி விழுந்த இடம், உள்நாட்டு முனைய பின் பகுதி; பயணிகள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால், யாரும் காயம் அடையவில்லை. நொறுங்கி விழுந்த கண்ணாடி பாகங்களை, ஊழியர்கள் உடனடியாக சுத்தம் செய்தனர். கண்ணாடி விழுந்த இடத்தை, விமான நிலைய அதிகாரிகள், 'வழக்கம் போல்' பார்வையிட்டுச் சென்றனர். புதிய கண்ணாடி பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தரமான பொருட்களா:
சென்னை விமான நிலையத்தில், கடந்த, ஆறு மாதங்களில், 12 முறை, மேற்கூரை மற்றும் கண்ணாடிகள் விழுந்து உள்ளன. எனவே, 'புதிய வசதிகளுடன் கட்டப்பட்ட விமான நிலையத்தில் பயன்படுத்தப்பட்டவை தரமான பொருட்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மேற்கூரை மற்றும் கண்ணாடி தொடர்ந்து விழுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Category: மாநில செய்தி
0 comments