பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகளில் ஓட்டை, உடைசல் பஸ்களால் நடுவழியில் தவிக்கும் பயணிகள்!
சென்னை, ஜன.13:
சென்னையில் வசிப்பவர்கள் பொங்கல் திருநாளை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளதால் புறநகர் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் தவிக்கின்றனர்.
பொங்கல் பண்டிகை நாளை முதல் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கிவிட்டனர். அரசு சார்பில் தமிழகம் முழுவதும் 6,514 சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் இருந்து 1,175 பஸ்கள் இயக்கப்பட்டன. நாளை 339 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசார் முன்னரே திட்டமிடாததாலும், சிறப்பு பஸ்கள் ஒரே நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தையொட்டிய சாலைகள் அனைத்திலும் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நகரே போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது. இந்த பாதிப்பால் பயணிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாயினர்.
போக்குவரத்து துறை பொங்கல் மற்றும் தீபாவளி காலங்களில் விடப்படும் சிறப்பு பஸ்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கடந்த ஆண்டு போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் புற நகர் பகுதியான வேளச்சேரி, பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டனர். ஆனால் இந்த பணி என்ன ஆனது என்று தெரியவில்லை.
கடந்த 10ம் தேதி முதல் பொங்கலுக்கு கூடுதலாக விடப்படும் அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களால் கோயம்பேட்டில் இருந்து வடபழனி நூறு அடி சாலை மற்றும் மதுரவாயல் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது.
அரசின் 8 போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஓரம் கட்டப்பட்ட பஸ்களை தூசி தட்டி சரிசெய்து சிறப்பு பஸ்களாக விடப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் டயர் வெடித்தும், பிரேக் பழுதாகியும், டீசல் இல்லாமலும் பஸ்கள் நிற்கும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. மேலும் சொகுசு பஸ்களின் கட்டணமே சாதாரண பஸ்களிலும் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர சென்னையில் இருந்து திருச்சி, விருதுநகர், தஞ்சாவூர், சேலம், கோவைக்கு செல்லும் பஸ்கள் இடையில் உள்ள கள்ளக்குறிச்சி, விருதாச்சலம், பண்ருட்டி, திண்டிவனம் செல்லும் பயணிகளை ஏற்றுவதில்லை. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் காத்து இருக்கும் நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டயர் பற்றாக்குறை அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது. நெடுந்தொலைவு செல்லும் பல பஸ்களில் ஸ்பேர் டயர்கள் இல்லாமலும், பராமரிப்பு பணிக்கு போதிய ஊழியர்கள் இன்றியும் திணறுகின்றனர்.
விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் கிராமப்புறங்களில் ஓடும் பஸ்களை சென்னைக்கு சிறப்பு பஸ்களாக விட்டுள்ளனர். இதனால் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சென்ற பொது மக்கள் அங்கிருந்து கிராமங்களுக்கு செல்ல முடியாமல் நடுவழியில் தவிக்கின்றனர். கிராமங்களுக்கு செல்லும் பஸ்களை சிறப்பு பஸ்களாக மாற்றி விடும் செயலுக்கு கிராமப்புற மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Category: மாநில செய்தி
0 comments