வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சமையல் கியாஸ் சிலிண்டர்களை 12 ஆக அதிகரிக்க பரிசீலனை!
வீடுகளுக்கு வழங்கப்படும்
மானிய விலை சமையல் கியாஸ் சிலிண்டர்களை 12 ஆக அதிகரிக்க பரிசீலனை
மத்திய மந்திரி வீரப்ப மொய்லி தகவல்
நொய்டா, ஜன.13-
வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சமையல் கியாஸ் சிலிண்டர்களை 12 ஆக அதிகரிக்க பரிசீலனை செய்யப்படுவதாக மத்திய மந்திரி வீரப்ப மொய்லி கூறினார்.
கியாஸ் சிலிண்டர்
எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்டுவதற்காக வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 9 ஆக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், இதனை 12 ஆக அதிகரிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்த ‘பெட்ரோடெக்-2014’ மாநாட்டுக்கு வந்த மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி நிருபர்களிடம் கூறியதாவது:-
12 ஆக உயர்த்த பரிசீலனை
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, வீடுகளுக்கு வழங்கும் மானிய விலை கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் பிரச்சினையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொண்டு சென்றதாக பத்திரிகைகளில் செய்தி பார்த்தேன்.
ஆனால் எனக்கு காங்கிரஸ் துணைத்தலைவரிடம் இருந்தோ, பிரதமரிடம் இருந்தோ எந்த கருத்தும் வரவில்லை. மானிய விலை கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 12 ஆக அதிகரிக்கும் பிரச்சினை அரசியல் விவகார மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் விவாதித்து இறுதி முடிவு செய்யப்படும்.
10 சதவீதம் பேர் தான்
தற்போதுள்ள 15 கோடி சமையல் கியாஸ் நுகர்வோர்களில் 89.2 சதவீதம் பேர் ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் தான் பயன்படுத்துகிறார்கள். 10 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் கூடுதல் தேவைக்காக வெளிச்சந்தை விலையில் கியாஸ் சிலிண்டர் வாங்குகிறார்கள். வருடத்திற்கு 12 சிலிண்டர்களாக உயர்த்தினால் 97 சதவீதம் பேரும் மானிய விலை சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்துவார்கள்.
அப்படி சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம் அமலுக்கு வருமானால், அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களை நாங்கள் ஆய்வு செய்ய வேண்டியதிருக்கும்.
அரசின் சுமையும்அதிகரிக்கும்
அதே சமயம் இந்த முடிவு அரசியல் விவகாரம் அல்லது பொருளாதார விவகார மந்திரிகள் குழு கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்படும். நாங்கள் அதன் பரிந்துரைகளை நன்கு ஆலோசித்து முடிவு எடுப்போம்.
சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தினால் அரசின் மானியச் சுமையும் ரூ.3,300 கோடியில் இருந்து ரூ.5,800 கோடியாக உயரும்.
இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.
விலை உயருமா?
அப்போது அருகில் இருந்த பெட்ரோலியத்துறை செயலாளர் விவேக் ரே கூறியதாவது:-
இந்த கூடுதல் நிதிச்சுமையை யார் ஏற்பது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த இடைவெளியை நுகர்வோர் ஏற்பார்களா? இதனையும் விவாதிக்க வேண்டியுள்ளது.
இதற்காக ஒரு முறை விலை உயர்வு அடிப்படையில் டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படுமா? என்பதை நான் இப்போது சொல்ல முடியாது. அரசு என்ன முடிவு எடுக்கிறது என்று பார்ப்போம்.
டீசல் விற்பனை கொள்கை
டீசல் மொத்த கொள்முதல் செய்பவர்களுக்கும் வெளிச்சந்தை விலையை மத்திய அரசு நிர்ணயித்தது. இதனால் மாநில அரசுகளின் போக்குவரத்து கழகங்கள் டீசலை சில்லரை விற்பனை ‘பெட்ரோல் பங்க்’குகளில் வாங்கத்தொடங்கிவிட்டன. இதனால் மொத்த டீசல் விற்பனை 89 சதவீதம் சரிந்தது. இதன் காரணமாக மொத்த கொள்முதல் மற்றும் வெளிச்சந்தை டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.10 வித்தியாசம் இருந்தது நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு போக்குவரத்து கழகங்களுக்கு குறைந்த விலையில் டீசல் கிடைக்கும் வகையில், மத்திய அரசு தனது மொத்த டீசல் விற்பனை கொள்கையை மறுபரிசீலனை செய்ய இருக்கிறது. இதுவும் பொருளாதார விவகார மந்திரிகள் குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு விவேக் ரே கூறினார்.
Category: மாநில செய்தி
0 comments