குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது!
சென்னை, ஜன. 29–
குவைத் நாட்டில் இருந்து சென்னைக்கு குவைத் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு வந்தது. அந்த விமானத்தில் ஆந்திரா மாநிலம் கடப்பாவை சேர்ந்த ராதா (வயது 27) என்ற பெண் பயணம் செய்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் அங்கு வீட்டு வேலை செய்து வந்தார்.
பிரசவத்திற்காக ராதா தனியாக விமானத்தில் பயணம் செய்தார் விமானம் அதிகாலை 3.30 மணியளில் சென்னையை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது ராதாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
அவர் வலியால் துடிப்பதை பார்த்து விமானப்பணி பெண்கள் பைலட்டிடம் கூறினர். அவர் உடனே சென்னை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இங்கு மருத்துவ குழுவினர் தயாராக இருந்தனர்.
இதற்கிடையில் ராதாவிற்கு வலி அதிகமானது. அவரை விமானத்தில் கீழே படுக்க வைத்தனர். பணிப்பெண்கள் மற்றும் பயணிகள் உதவி செய்ய அவருக்கு சுகப்பிரசவம் ஆனது அதிகாலை 4.05 மணிக்கு நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, ராதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை கையில் எடுத்து துணியால் துடைத்து சுத்தம் செய்தனர்.
சிறிது நேரத்தில் விமானம் சென்னையில் தரை இறங்கியது. அப்பல்லோ மருத்துவ குழுவினர் தாயையும் சேயையும் பாதுகாப்பாக கொண்டு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர். விமானத்தில் குழந்தை பிறந்தததால் விமானப்பயணிகளிலும், பைலட்களும் பணிப்பெண்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
விமான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ராதா கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயும்–குழந்தையும் நலமாய் உள்ளனர். ராதாவிற்கு குழந்தை பிறந்த தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: வளைகுட செய்தி
0 comments