ஆண்டு எண் அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகளை இப்போதே மாற்ற தொடங்குங்கள் பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை!
புதுடெல்லி, ஜன.25- ஆண்டு எண் அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகளை இப்போதே வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள் என்று பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை கூறியுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் 2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அவை அச்சிடப்பட்ட ஆண்டு இடம்பெற்று இருக்காது. அந்த நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருப்பதால், அவை கள்ள நோட்டு அச்சிடுவதற்கு வழிவகுத்து விடும். எனவே, அத்தகைய நோட்டுகளை மார்ச் 31-ந்தேதிக்கு பிறகு திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 22-ந்தேதி அறிவித்தது. ஏப்ரல் 1-ந்தேதி முதல், அந்த நோட்டுகளை எந்த வங்கியிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறி இருந்தது. இதனால், பொதுமக்கள் பீதி அடைந்து, 2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை தள்ளி விடுவதில் முனைப்பு காட்டினர். மாற்ற தொடங்கலாம் இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை இப்போதே மாற்றிக்கொள்ள தொடங்கலாம் என்று பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை கூறியுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப வங்கிக்கிளைகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள தொடங்கலாம். இதுபோன்று பழைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவது வழக்கமான சர்வதேச நடைமுறைதான். 2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்டு, தற்போது புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் எண்ணிக்கை, பொதுமக்களை பாதிக்கும் அளவுக்கு கணிசமானது அல்ல என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. அந்த நோட்டுகள், தொடர்ந்து செல்லுபடி ஆகும். ஜூலை 1-ந்தேதிக்கு பிறகு கூட, அத்தகைய நோட்டுகளை, தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக்கிளைகளில் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம். நோட்டுகளை மாற்றும் பணியை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்யும். எனவே, பொதுமக்களுக்கு அசவுகரியம் எதுவும் ஏற்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கவர்னர் விளக்கம் இதற்கிடையே, இந்த வாபஸ் நடவடிக்கை, தேர்தலுக்காக எடுக்கப்பட்டது அல்ல என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- 2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக உள்ளன. எனவே, அவற்றை வாபஸ் பெறும்படி மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இதற்கும், தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். எத்தனை நோட்டுகள் ரிசர்வ் வங்கி கணக்குப்படி, கடந்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 7 ஆயிரத்து 351 கோடி கரன்சி நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் 500 ரூபாய் நோட்டுகள் 14.6 சதவீதமும், 1,000 ரூபாய் நோட்டுகள் 5.9 சதவீதமும் ஆகும். ரிசர்வ் வங்கி கடந்த காலங்களிலும் சில குறிப்பிட்ட வரிசை கரன்சி நோட்டுகளை வங்கிகள் மட்டத்தில் வாபஸ் பெற்றுள்ளது. ஆனால், பொதுமக்கள் மாற்றிக்கொள்ள வேண் டும் என்று கூறியது இல்லை. |
Category: மாநில செய்தி
0 comments