பெரம்பலூரில் 3-ம் ஆண்டு புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது!
நமது வாழ்வில் தன்னம்பிக்கையும், செழுமையும் தருவது புத்தகங்களே என்றார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்
கழகத்தின் துணைவேந்தர் ம. திருமலை.
பெரம்பலூர் நகராட்சித் திடலில், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் அறக்கட்டளை சார்பில், 3-ம் ஆண்டு புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புத்தகக் கண்காட்சியை தொடக்கிவைத்து, புத்தக அரங்குகளை பார்வையிட்டு துணைவேந்தர் ம. திருமலை பேசியது:
பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், மாவட்ட ஆட்சியரின் சீரிய முயற்சியில் நடத்தப்படும் புத்தகத் திருவிழா 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நமது வாழ்க்கையில் தன்னம்பிக்கையும், செழுமையும் தரும் ஆற்றல் புத்தகத்துக்கு உள்ளது. எனது வாழ்க்கையில் நான் பல்வேறு சூழ்நிலைகளில் துவண்டு நின்ற போதெல்லாம் தைரியத்தையும், தடைகளைத் தாண்டிச் செல்லும் வலிமையையும் புத்தகங்களே அளித்துள்ளன. நம்மை எப்போதும் விழிப்புடன் இருக்க செய்வது புத்தகங்களே. எனவே, அனைவரும் புத்தகத் திருவிழாவுக்கான பங்களிப்பை அளிக்கும் வகையில், புத்தகங்களை வாங்கிச் சென்று பயன்பெற வேண்டும் என்றார் திருமலை.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பேசியது:
தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவில், சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தப் புத்தகங்களின் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையிலும், வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வகையிலும் அனைவரும் நூல்களை வாங்கிப் படித்து பயன்பெற வேண்டும் என்றார்.
தொடர்ந்து, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சுகி சிவம் சொற்பொழிவாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ. சுப்பிரமணியன், சார் ஆட்சியர் பா. மதசூதன்ரெட்டி, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன், செயலர் பி. நீலராஜ், மாவட்ட காவல் துணைக் கண்காளிப்பாளர் சுருளியாண்டி, பப்பாசி மேலாண் தலைவர் ஆர்.எஸ். சண்முகம், தலைவர் எஸ்.எம். மீனாட்சி சோமசுந்தரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அ. அய்யம்பெருமாள், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் என். சேகர், ஒன்றியக் குழுத் தலைவர்கள் என். கிருஷ்ணகுமார் (வேப்பூர்), ரா. வெண்ணிலா (ஆலத்தூர்), க. ஜெயலட்சுமி (வேப்பந்தட்டை) உள்ளிட்ட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments